புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கும் நிகழ்வை வரும் 24-ல் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைக்கிறார். தவறு செய்வோரை மறைக்காமல் சட்டத்தின் முன் நிறுத்த போலீஸாருக்கு மக்கள் ஒத்துழைப்பது அவசியம் என புதுச்சேரி டிஜஜி சத்தியசுந்தரம் தெரிவித்தார்.
புதுவை தமிழ் சங்கத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதி திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து குறள் ஒப்புவிப்பது வழக்கம். திருக்குறளை மாணவர் மத்தியில் கொண்டு செல்வதற்கும், திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தியும் இந்த நிகழ்வை தமிழ் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.
இதன்படி இன்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழ் சங்கத் தலைவர் முத்து, செயலாளர் சீனு மோகன்தாஸ் முன்னிலையில், பள்ளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் திருக்குறளை தெரிவித்தனர்.
இதன்பின் டிஐஜி சத்திய சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகத்தில் எல்லா உண்மைகளையும் அடங்கிய பொக்கிஷமாக திருக்குறள் விளங்குகிறது. தமிழ் சமுதாயம் எம்மதமும் சம்மதம் என கூறுவது திருக்குறள் காலத்திலிருந்து நிகழ்கிறது. கல்வி முக்கியம், புதுவை பள்ளிகளில் பாலியல் சீண்டலை தடுக்க நல்ல தொடுதல் எது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.
வரும் 24-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கும் நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் துவக்கி வைக்கிறார். பள்ளிகள் முன்பு சமூகவிரோத நபர்களை கண்காணிக்க அனைத்து பள்ளிகள் முன்பும் போலீஸார் பணியில் அமர்த்தப்படுவர். தவறு செய்தவர்களை மறைக்காமல் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பிரச்சினைகளை பேசி தீர்க்கக்காமல் புகார் தந்தால் உரிய தண்டனை பெற்று தருவோம் என்று குறிப்பிட்டார்.