மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே. மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோயிலை அபிவிருத்தியும் செய்தார். வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, ‘வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள்.
இப்படி வரலாற்றில் தன் பெருமையைப் பதிவு செய்து வைத்துள்ளது மணக்குள விநாயகர் கோயில். இந்த ஆலயத்தில் கிழக்கு நோக்கி அருளும் விநாயகரின் திருமேனியில் பின் இரு கரங்கள் பாசம் அங்குசம் ஏந்தியும், முன் இரு கரங்கள் அபயம் வரதமாகவும் அமைந்துள்ளன.
மணற்குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறம் உள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது. கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் ஸ்ரீபால விநாயகரும், வடமேற்கில் ஸ்ரீபால சுப்ரமணியரும் அருள்கின்றனர். வடக்குப் புறம் ஸ்ரீசண்டீசர் சந்நிதி உள்ளது. அங்குள்ள உத்ஸவர் மண்டபத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஹரித்ரா கணபதி, ஸ்ரீசித்தி புத்தி கணபதி, ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீபாலசுப்ர மணியர், வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டீசர், அஸ்திரதேவர் முதலான உத்ஸவ மூர்த்திகளுடன் ஸ்படிக லிங்கமும் உள்ளது.
இந்தக் கோயிலில் விநாயகருக்குப் பள்ளியறை காணப்படுவது சிறப்பு. தங்கத்தேர் உலாவும் உண்டு. அனைத்து மதத்தினரும், வெளிநாட்டுப் பயணிகளும் இவரை வணங்கிச் செல்கிறார்கள்.
‘பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக்கோயில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது. தினமும் நான்கு கால பூஜை, மாதம்தோறும் சங்கடஹர சதுர்த்தி, ஆவணி மாதம் விநாயக சதுர்த்தியையட்டி பிரம்மோத்ஸவம், மாசிமகத் திருவிழா போன்ற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பண்டித வி.மு. சுப்ரமண்ய ஐயர், கோவை நாகலிங்க சுவாமிகள் போன்ற அருளாளர்கள் மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடியுள்ளனர்.
மேலும் கடன் பிரச்னை தீரவும் தீராத வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவும் இந்த விநாயகரை வேண்டிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் பக்தர்கள்.
வாய்ப்புள்ளவர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் சகல நலன்களும் உண்டாகும்.