புதுச்சேரி மின்துறையை தாரைவார்க்க நடவடிக்கை: நாராயணசாமி சாடல் | Narayanasamy slam government on Puducherry power station issue

1339945.jpg
Spread the love

புதுச்சேரி: “புதுச்சேரி மின்துறையை தாரைவார்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும், “தனது சொத்துகளைக் காப்பாற்ற பாஜகவில் சேர்ந்து அமைச்சரான நமச்சிவாயம் நாவடக்கத்துடன் பேச வேண்டும்” என்று அவர் கூறினார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: “ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என கூறி வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, 370-வது சட்டப்பிரிவு கொண்டுவரப்படும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். புதுச்சேரிக்கு மாநில அ ந்தஸ்து வழங்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என பிரதமர் மோடி அரசு பதிலளித்துள்ளது. புதுச்சேரி மக்களின் எண்ணங்களை மத்திய பாஜக அரசு புறக்கணிக்கிறது. வாக்குறுதியை நிறைவேற்றாமல் பாஜக ஏமாற்றி வருகிறது. முதல்வர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக ஆட்சியில் அமர்ந்தள்ளது. காங்கிரஸ் ஆட்சி வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவோம்.

மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம், பிரீபெய்டு திட்டத்தை மாற்றி போஸ்ட்பெய்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மின்துறையை என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசு சீரழித்து வருகிறது. புதுச்சேரி மின் விநியோகத்தை தாரை வார்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். அதானியிடம் மின்துறையை ஒப்படைக்க கையெழுத்து போட்டு, அனைத்து வேலையும் நடத்தி முடித்து விட்டனர். ஆனால் முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர் மின்துறை தனியார்மயமாகாது என கபடநாடகம் ஆடுகின்றனர்.

முதல்வர் தீபாவளிக்கு முன்பு ரேஷன் கடைகளை திறந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்வோம் என கூறினார். தீபாவளிக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்றார். ஆனால் எந்த ரேஷன்கடையும் திறக்கவில்லை. ரேஷன் கடைகளுக்கு வாடகை தரவில்லை. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. இப்போது அங்கன்வாடிகளை தேடி வருகின்றனர். மக்கள் ரேஷன்கடைகளை தேடி சுற்றி வருகின்றனர். ரூ.1000 மதிப்பு பொருட்களை ரூ.500-க்கு வழங்குவோம் என ரங்கசாமி கூறினார். அதுவும் தரவில்லை.

புதுச்சேரி மக்களை தொடர்ந்து என்ஆர். காங்கிரஸ், பாஜக அரசு ஏமாற்றி வருகிறது. சில இடங்களில் வழங்கிய அரிசியும் தரமற்றதாக உள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் கையூட்டு பெறப்பட்டுள்ளது. பல முக்கிய துறைகளை வகித்து பதவி சுகம் அனுபவித்த நமச்சிவாயம், காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டது என கூறுகிறார். அப்போது ஏன் அவர் இதை எதிர்க்கவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே செல்லவில்லை?

ஆயுள் தண்டனை கைதி ஒருவரை விடுதலை செய்ய நமச்சிவாயம் என்னிடம் கேட்டார். அவரை விடுதலை செய்ய முடியாது என உறுதியாக நான் கூறினேன். நமச்சிவாயம் என்னை பற்றியும், ஆட்சியை பற்றியும் விமர்சித்தால், அவர் எந்த ரவுடிக்காக பரிந்துரை செய்தார் என பொதுமக்களிடம் பகிரங்கமாக தெரிவிப்பேன். தனது சொத்தை காப்பாற்ற பாஜகவில் சேர்ந்து அமைச்சரான நமச்சிவாயம் நாவடக்கத்துடன் பேச வேண்டும். புதுச்சேரியில் சட்டம் – ஒழுங்கு கெட்டுப்போக முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சி வாயம்தான் காரணம். இது புதுச்சேரி மக்களுக்கு தெரியும்.

புதுச்சேரியிலும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். பெட்ரோல் நிலையம் அமைக்க 9 துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். இந்த கோப்புகள் முதல்வருக்கு செல்ல வேண்டும் என அறிவிப்பு செய்துள்ளனர்.

முதல்வரிடம் உள்ள புரோக்கர்கள் பணம் கொடுத்தால்தான் கோப்புகளுக்கு அனுமதி கிடைக்கும் என உரிமையாளர்களை மிரட்டுகின்றனர். இது ஊழலுக்கு வழி வகுக்கும். முதல்வருக்கு கோப்பு அனுப்ப வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கட்சித் தலைமை அனுமதி கொடுத்தால் புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதியில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுவேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *