புதுச்சேரி: புதுச்சேரியில் பிரபல ரவுடி ‘பாம்’ ரவி உள்பட இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 29 பேரில் 28 பேர் விடுவிக்கப்பட்டனர். ஒருவருக்கு மட்டும் ஆயுதத்தடைச் சட்டத்தில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாம் ரவி. இவர் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் இருந்தன. இவரது நண்பர் அந்தோணி. இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரில் அதே பகுதியில் உள்ள அலைன் வீதி சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செயயப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை குறித்து முதலியார்பேட்டை போலீஸார் மர்டர் மணிகண்டன் உள்ளிட்ட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இவர்களில் ஒருவர் தலைமறைவான நிலையில் மற்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததால் 29 பேர் மீது மட்டும் புதுச்சேரி 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்குவதாக இருந்த நிலையில், தீர்ப்பு இன்று (ஜூலை 6) தள்ளிவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரட்டை கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அதேசமயம் இரட்டைக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த பிரேம் (41) என்பவருக்கு ஆயுதம் வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் 7 ஆண்டு தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.