அந்த மனுவில், `கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் `கியூ-ஆர்’ கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டுவிடும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
அதற்கு காவல்துறை அனுமதி கொடுத்த நிலையில், அந்த இடத்திற்கு அனுமதி கேட்டு பொதுப்பணித்துறைக்கு மனு அளித்தனர்.
அதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தை ஆய்வு செய்த டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் மற்றும் சீனியர் எஸ்.பி கலைவாணன், பொதுக்கூட்டத்திற்காக த.வெ.க போட்டிருந்த வியூகங்களை கேட்டறிந்தனர்.
அதன் பிறகு டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போன்றவர்களை தனித்தனியாக சந்தித்த புஸ்ஸி ஆனந்த், பொதுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.

அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் துறைமுக மைதானத்தில் சிறப்பு பூஜைகள் செய்து, சீரமைக்கும் பணியில் இறங்கினர் த.வெ.க நிர்வாகிகள்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அந்த மைதானத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
அதனால் முதல் கட்டமாக அங்கு லாரிகள் மூலம் மண் எடுத்துவந்து கொட்டப்பட்டு, ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு அந்த இடத்தை சமப்படுத்தும் பணி வேகவேகமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நிபந்தனைகளுடன் புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியிருப்பதால், புஸ்ஸி ஆனந்தே முன்னின்று பொதுக்கூட்ட மைதானத்தை சீரமைக்கும் பணிகளை செய்து வருகிறார்.