புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதனால், கடற்கரை சாலையில் கலாசார மையத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தை தற்காலிக ஆளுநர் மாளிகையாக மாற்றி, அங்கு குடும்பத்துடன் குடியேறினார் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, 24 மணி நேரக் கண்காணிப்பு என அந்த இடமே ஒரு கோட்டை போலக் காட்சியளிக்கும்.

நேற்று நள்ளிரவு மது போதையில் கடற்கரை சாலையில் நடந்து வந்த இரண்டு இளைஞர்கள், ஆளுநர் மாளிகையின் அழகைப் பார்த்து வியந்திருக்கிறார்கள். அத்துடன் நிற்காமல் அதன் சுவரில் ஏறிக் குதித்து ஆளுநர் மாளிகைக்குள் சென்று, அங்கிருந்த அறைகளை திறந்து திறந்து பார்த்திருக்கிறார்கள். அனைத்திலும் உயர்தர படுக்கைகளுடன் ஐந்து நட்சத்திர விடுதி அறைகளைப் போல இருந்ததால், உற்சாகமான அவர்கள் ஆடைகளை கலைந்துவிட்டு அந்த படுக்கையில் அயர்ந்து தூங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மீண்டும் ஆளுநர் மாளிகையின் சுவர் ஏறிக் குதித்து வெளியில் சென்றிருக்கிறார்.