புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடித்து, கேக் வெட்டி உற்சாகம் – Kumudam

Spread the love

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு 2026 இன்று (ஜன.1) பிறந்துள்ளது. உலகிலேயே முதல் தீவு நாடாக கிரிபாடியில், இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3:30-க்கு புத்தாண்டு உதயமானது. நாடு முழுவதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் மக்கள் உற்சாகமாக பகிர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் மணிக்கூண்டு அருகே ஆயிரகணக்கனோர் திரண்டு புத்தாண்டைவரவேற்றனர். புத்தாண்டையொட்டி, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் நேற்று மாலை முதலே ஏராளமான மக்கள் குவிந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆடியும், பாடியும் புத்தாண்டை வரவேற்றனர்.

சரியாக நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததையொட்டி, பொதுமக்கள் பட்டாசு வெடித்து, பாட்டு பாடி, கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ’ஹாப்பி நியூ இயர்’ என புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். அதேபோல், பெசன்ட் நகர் கடற்கரை, எலியாட்ஸ் கடற்கரை, மெரினா உழைப்பாளர் சிலை மற்றும் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள் என பல்வேறு இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.

புதுச்சேரியில் குவிந்த மக்கள் 

புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட நேற்று மாலை முதல் கடற்கரை காந்தி திடலில் ஆயிரக்கணக்கான வெளியூர், வெளி மாநில சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் திரண்டனர்.நள்ளிரவு 12:00 மணி ஆனதும், கடற்கரையில் கூடியிருந்த மக்கள், ‘ஹாப்பி நியூ இயர்’ என, கோஷம் எழுப்பி உற்சாகமாக கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து திரும்பிய மக்களால் சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மணிக்கூண்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னை மெரினா கடற்கரையில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை நகர் முழுவதும் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டு இருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அதன் பிறகும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். சென்னையில் கிட்டத்தட்ட 425 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சிறப்பு வழிபாடு

தமிழ்நாடு முழவதும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் பிரார்த்தனைகள் மேற்கொண்டு புத்தாண்டை வரவேற்றனர். இதில், சென்னையில் உள்ள சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் லஸ் தேவாலயம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளிட்ட தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை திருப்பலி கூட்டங்கள் உற்சாகத்துடன் நடைபெற்றன. இதில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமான கிறிஸ்தவ மக்கள் குடும்பமாக வருகை புரிந்து சிறப்பு வழிபாடு செய்தனர். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம். இதேபோன்று அறுபடை வீடுகளான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில், பூங்கா முருகன் உள்ளிட்ட கோவில்களிலும் பொதுமக்கள் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதே போன்று தமிழகத்தின் பல்வேறு கோவில்களிலும் இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *