வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
கொடைக்கானல் என்றாலே குளு குளு காலநிலையும், மேப்பல் மரங்களும், நட்சத்திர ஏரியும்தான் நம் நினைவுக்கு வரும். சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான அந்தப் பனிமலைப் பிரதேசத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள், வெளியுலகின் ஆரவாரங்கள் எதுவும் எட்டாத, காலத்தின் உறை நிலையில் ஒரு கிராமம் அமைந்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?
அதுதான் வெள்ளகவி!

நூற்றாண்டுகள் கடந்தும் தொடரும் நடைபயணம்
கொடைக்கானல் மலையகத்தில் அமைந்துள்ள மிகப்பழமையான, தனித்துவமான கிராமங்களில் ஒன்று வெள்ளகவி. சுமார் 300 முதல் 500 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது இந்தக் குடியிருப்பு. பழங்குடியின மக்களும், பின்னர் குடியேறிய விவசாயக் குடும்பங்களும் இணைந்து உருவாக்கிய ஒரு சிறப்புமிக்க சமூகக் கட்டமைப்பு இது.
ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டிலும், டிஜிட்டல் இந்தியாவின் வெளிச்சம் முழுமையாகப் படாத ஒரு பகுதியாகவே இது இருக்கிறது. காரணம்? சாலை வசதி இல்லை! இந்த கிராமம் முழுமையாகக் கொடைக்கானல் வனப் பாதுகாப்பு மண்டலத்தின் உள்ளே அமைந்திருப்பதால், சாலை அமைப்பதற்கான அனுமதி பல ஆண்டுகளாகக் கானல் நீராகவே உள்ளது.
ஒற்றையடிப் பாதையும், கரடுமுரடான கால்நடை வழியும்தான் இவர்களின் “தேசிய நெடுஞ்சாலை’. வெளியுலகை அடைய வேண்டுமென்றால், செங்குத்தான மலைகளில் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரக் கடுமையான நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.