புதுதில்லி: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளை புனித வெள்ளியாக நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவமக்கள் கொண்டாடி வருகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதையும் மனிதகுலத்திற்காக அவர் செய்த தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை காலை முதல் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
புனித வெள்ளியையொட்டி, தில்லியில் உள்ள பழமையான தேவாலயமான புனித இதய கதீட்ரலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, வடகிழக்கு நகரமான குவஹாத்தியில், இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் டான் போஸ்கோ நிறுவனத்தில் மாணவர்கள் புனித வெள்ளி சிறப்பு பிராா்த்தனைகளில் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி
புனித வெள்ளியை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகங்களை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்த நாள் கருணை, இரக்கம் மற்றும் எப்போதும் பரந்த மனதுடன் இருக்க மக்களை ஊக்குவிக்கிறது.
“புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவு கூர்கிறோம். இந்த நாள் கருணை, இரக்கம் மற்றும் எப்போதும் பரந்த மனதுடன் இருக்க நம்மைத் தூண்டுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையின் உணர்வு எப்போதும் மேலோங்கட்டும்” என்று கூறியுள்ளார்.