புனேவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர்களான அனிஷ் மற்றும் அஷ்வினி ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
என்ஜினீயர்கள் பலி
சுமார் 2.30 மணி அளவில் கல்யாணிநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் மின்னல் வேகத்தில் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் என்ஜினீயர்கள் அனிஷ் மற்றும் அஷ்வினி ஆகிய இருவரும் பலியானார்கள்
காரை மதுபோதையில் 17 வயது சிறுவன் ஓட்டியது தெரிந்தது.
அவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவனை போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது விபத்து ஏற்படுத்தியது சிறுவன் என்பதால் அவனுக்கு 15 மணி நேரத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
15 மணி நேரத்தில் ஜாமீன்
விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் அந்த சிறுவன் ஒரு பப்பில் மது அருந்தும் கண்காணிப்பு காமிரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மது பான பார் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் 2 பேர் உட்பட 3 பேர் மீதும், கார் ஓட்டிய சிறுவனின் தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் சிறுவனுக்கு மதுபானம் சப்ளை செய்த பாருக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதற்கிடையே 2 பேர் பலியான சம்பவத்தில் 15 மணி நேரத்தில் உடனடியாக சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அவனது ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஜாமீன் ரத்து
இந்த நிலையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை இன்று (புதன்கிழமை) கோர்ட்டு ரத்து செய்தது. மேலும் அவனை ஜுன் 5-ந்தேதி வரை சிறுவர்கள் மறுவாழ்வு மையத்தில் அடைக்க உத்தரவிட்டது.
மேலும் அவன் ஏர்வாடா போக்குவரத்து போலீசில் 15 நாட்கள் சமூக சேவை செய்யவேண்டும், விபத்து மற்றும் அதன் விளைவுகள் குறித்து 300 வார்த்தைகளை கொண்டு கட்டுரை எழுதுதல் மற்றும் மனநல ஆலோசனை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிறுவன் குடிப்பழக்கத்தை கைவிடமருத்துவரின் உதவியை நாடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
160 கி.மீட்டர் வேகம்
இதற்கிடையே சிறுவனின் தந்தையை 24&ந்தேதி வரை 2 நாட்கள் போலீஸ்காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கி இருக்கிறது.
பிரபல கட்டிடநிறுவனரின் மகனான சிறுவன் விபத்து நடந்த அன்று இரவு மட்டும் பப்பில் நண்பர்களுடன் மதுகுடிக்க ரூ.48 ஆயிரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுவன் குடிபோதையில் 160 கி.மீட்டர்வேகத்தில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.