ஒடிஸா புரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஒடிஸாவில் மோகன் சரண் மாஜி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று (ஜூலை 7) நடைபெறவுள்ளது. யாத்திரையையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர் அமர்ந்து நகரை வலம் வருவார்கள்.
இந்தக் கோயிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகந்நாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது.
ஜெகநாதருக்கு 45 அடி உயர தேரும், பாலபத்திரருக்கு 44 அடி உயர தேரும், சுபத்ராவுக்கு 43 அடி உயர தேரும் உருவாக்கப்பட்டுள்ளது.
ரத யாத்திரைக்காக ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
ரதங்கள் ஜெகநாதர் கோவிலின் சிம்ம வாசல் முன் நிறுத்தப்பட்டு, பூரி ஜெகன்நாதரின் தோட்ட வீடு என்றும் அழைக்கப்படும் குண்டிச்சா கோயிலுக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துகொண்டுள்ளார். முன்னதாக ஜெகந்நாதர் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநில முதல்வர் சரண் மாஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.