சிவகார்த்திகேயனின் 25வது படமான ‘பராசக்தி’ திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
புரட்சித் தீயாய் வெடிக்கும் வசனங்கள், தியேட்டர் மெட்டீரியலாக அமைந்திருக்கும் இண்டர்வெல் காட்சி, மனதை இறுக்கமாக்கும் ப்ரீ-க்ளைமேக்ஸ் காட்சி என அனைத்தையும் பெரும் எழுத்துக் கூட்டணி கொண்ட குழுவால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

‘பராசக்தி’யில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் அர்ஜுன் நடேசன். இவர் சுதா கொங்கராவின் சீடர்.
‘சூரரைப் போற்று’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியைத் தொடங்கி, இப்போது திரைக்கதையாசிரியர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார்.
‘பராசக்தி’க்கு வாழ்த்துகள் சொல்லி அவரைச் சந்தித்து உரையாடினோம். மென்மையாக நம் கேள்விகளுக்கு பதிலளித்தவர்…
சுதா கொங்கராவிடம் ‘சூரரைப் போற்று’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியை மேற்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து திரைக்கதையும் எழுதியிருக்கிறீர்கள்! உதவி இயக்குநர் டு ரைட்டர் ப்ரோமோஷன் கிடைத்தது எப்படி?
நான் இப்படியான ஒரு பரிமாணத்தை எதிர்பார்க்கவே இல்லை. சுதா மேமுடைய டிஸ்கஷன் எப்போதும் ஜனநாயகமாக இருக்கும். நாம் சொல்லும் விஷயங்கள், அவங்களுக்கு பிடித்துப் போச்சுனா நிச்சயமாக அதை ஏற்றுப்பாங்க. ஒருவேளை அது அவங்களுக்கு வொர்க் ஆகலைனாலும் ‘நோ’னு சொல்லிடுவாங்க. ஜூனியர், சீனியர்னு யார் எந்த விஷயம் சொன்னாலும், சுதா மேம் அதுக்கு இடம் கொடுப்பாங்க. ‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, கொரோனா டைம்லதான் இந்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்கினோம். அப்போது, நெருக்கடியான சூழல்கள் காரணமாகக் குறைவான ஆட்களே கலந்துரையாடல்களில் இருப்போம். அப்படியான சமயத்தில் எங்களுக்குள்ள நல்ல கம்ஃபர்ட் அமைந்திடுச்சு. அது இந்த ப்ரோமோஷனுக்கு முக்கியமானதாகவும் அமைந்திருக்கலாம்.

படத்தின் முக்கியக் களம் பரபரப்பான ஒன்றாக இருந்தாலும் அதைக் கமர்ஷியல் ட்ரீட்மென்டில் சொல்லியிருக்கிறீர்கள். கமர்ஷியலாகவே இந்தப் படத்தைக் கொண்டுபோக நினைத்ததற்குக் காரணம் என்ன?
படத்தைத் தொடங்கும்போதே, இதை மெயின்ஸ்ட்ரீமில் கொண்டுபோகணும்னு முடிவு செய்திட்டோம். அதே சமயத்தில், கமர்ஷியல் விஷயங்கள் கதையிலிருந்து வெளியேறிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம். இந்தக் கதைக்கான ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கும்போது, இதில் அடங்கியிருக்கும் பல இருள் பக்கங்கள் எங்களுக்குத் தெரிய வந்துச்சு. அதை மெயின்ஸ்ட்ரீம் வழியில் பயணித்துச் சொல்லவும் முடிவு பண்ணினோம். இப்போ எடுத்துக்காட்டாக, ‘டைட்டானிக்’ படத்தை எடுத்துக்கொள்ளலாம். அது உண்மையான சம்பவம். அதை மெயின்ஸ்ட்ரீமில் சொல்லியிருக்கிறார்கள். அதுபோல ‘பேட்டில் ஆஃப் அல்ஜீரியா’ படத்தின் டோனை ‘பராசக்தி’க்குக் கொண்டுவந்து மெயின்ஸ்ட்ரீம் வடிவத்தில் சொல்லத் திட்டமிட்டோம். மக்கள் அனைவரும் படம் பார்க்க வேண்டுமென்பதிலும் கவனமாக இருந்தோம்.
“‘சின்னதுரை’ கேரக்டருக்கு அதர்வா சரியாக இருப்பாரா’னு உங்களுக்கு சில சந்தேகங்கள் இருந்ததாக சுதா கொங்கரா சொல்லியிருந்தாரே! எதனால் அந்த சந்தேகங்கள்?
(மென்மையாகச் சிரித்துக் கொண்டே…) இதற்கு முன்னாடி இந்தக் கதையை வேறு சில நடிகர்களுக்காக எழுதி வச்சிருந்தோம். அதிலிருந்து மனம் மாறுவதற்கு டைம் தேவைப்பட்டிருக்கலாம். அது அந்த சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கலாம். சொல்லப்போனால், சின்னதுரை கேரக்டரை ‘மௌன ராகம்’ படக் கார்த்தியின் கதாபாத்திரத்தை எண்ணத்தில் வச்சுதான் டிசைன் பண்ணினோம். புரட்சிகரமான இளைஞர், அதே சமயம் ஸ்டைலாகவும் வசீகரமான தோற்றமும் இருக்கணும். அதர்வா ப்ரதர், லுக் டெஸ்ட்லேயே எங்களுடைய நம்பிக்கைகளைச் சம்பாதிச்சுட்டார்னு சொல்லலாம். படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களின் லுக் டெஸ்ட் பார்க்கும்போதே, எங்களுக்குள்ள பெருமளவு நம்பிக்கை பிறந்துடுச்சுனு சொல்லலாம்.

படத்தின் இண்டர்வெல் காட்சி, ‘பாட்ஷா’ மொமென்டாக இருக்குமென தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சொல்லியிருந்தாரே, அந்த இண்டர்வெல் காட்சிக்குப் பின்னுள்ள கதையை விவரிக்க முடியுமா?
படத்தில் நீங்க பார்க்கும் முதல் ரயில் காட்சி, தொடக்கத்துல அந்த இடத்துல அமைக்கிறதாக இல்லை. முதல் பாதி முழுவதும் செழியனின் கதாபாத்திரம், மொழிப் போரிலிருந்து விலகி இருக்கிற மாதிரிதான் டிசைன் பண்ணியிருந்தோம். இரண்டாம் பாதியில்தான் செழியனின் உண்மையான அடையாளத்தை ரிவீல் செய்வது போன்ற காட்சிகள் எழுதியிருந்தோம். ஆனா, அந்த விஷயத்தை மாற்றணும்னு முடிவு செய்து முதல்ல ரயிலை எரிக்கிற காட்சியை இணைத்தோம். காட்சிகளை மாற்றினாலும், அதே தாக்கத்தை க்ளைமேக்ஸ் கொடுத்தது. இண்டர்வெல் சீனில் எஸ்.கே சார் பேட்மேன் மாதிரி மேலே நிற்பார். அந்த ஷாட்டுக்கு ஐடியா தந்தது ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் சார்தான். வேறொரு ஷாட் முன்பே எடுத்திட்டோம். பிறகுதான் இப்படியொண்ணு எடுத்தா செழியனை இன்னும் பவர்ஃபுல்லாகக் காட்டலாம்னு அவர் ஐடியா கொடுக்க, அதை சாத்தியப்படுத்திட்டோம்.
இந்தக் கதைக்கு பேராசிரியர் அ. இராமசாமியின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கிறது?
முதலிலேயே அவருடைய புத்தகங்களைப் படிச்சிட்டோம். பிறகு அதை வச்சு முதல் கதை டிராஃப்ட் முடிச்சிட்டோம். அந்தக் கதையை எடுத்துட்டு வாங்க, நான் படிக்கிறேன்னு அவர் சொன்னதும் அதை உடனடியாக நான் மதுரைக்குக் கொண்டு போனேன். அவரொரு பேராசிரியர், அது போலவே ரெட் பேனாவில் மாணவனுக்குத் திருத்துவது போல திருத்தி, சில விஷயங்களை எங்களிடம் சொன்னார். அவருடன் பணியாற்றியதை பெருமையாக உணர்றேன்.

சூர்யாவுக்காக செய்து வைத்த திரைக்கதை, பிறகு எஸ்.கே வந்ததும் எந்தெந்த விஷயங்கள் மாற்ற வேண்டியதாக இருந்தன?
சொல்லப்போனால், பெரிதாக எதுவும் மாற்றலைங்கிறதுதான் உண்மை. எஸ்.கே சாருக்கு எப்போதும் ஒரு ஃபன்னான பக்கம் இருக்கும். அதை வெளிக்கொண்டு வர்ற மாதிரியான விஷயங்களைத் திரைக்கதையில் சேர்த்தோம். காதல் காட்சிகளிலும் அவருடைய வலுவான பக்கத்தையே கொண்டுவர நினைத்தோம்.

அறிஞர் அண்ணாவின் குரலைக் கொண்டு கச்சிதமாகக் கொண்டு வருவதற்கு ஏ.ஐ. பயன்படுத்தினீர்களா?
இல்லைங்க! அதை சேத்தன் சாரே முயற்சி செய்து கொண்டு வந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அப்படியான குரல்ல பேசுறதுக்கு பெருமளவு முயற்சி பண்ணினாரு. பிறகு டப்பிங்ல முழுமையாக அதை கொண்டுவந்திட்டாரு. முதல்ல அந்தக் கேரக்டர்ல எஸ்.எஸ். ஸ்டான்லி சார்தான் நடிக்க வேண்டியதாக இருந்துச்சு. துரதிர்ஷ்டவசமாக, அவர் இப்போ நம்ம கூட இல்லை. பிறகு சேத்தன் சார் வந்து, அந்தக் கேரக்டருக்கு மிகக் கச்சிதாகப் பொருந்திட்டாரு.
முழுப் பேட்டியைப் காண கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்