புற்றுநோய் சிகிச்சை.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நடிகர் சிவராஜ்குமார்

Dinamani2f2025 01 022frmcu85hh2fshiva.jpg
Spread the love

புளோரிடா: புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டேன் என்று நடிகர் சிவராஜ்குமார் தனது ரசிகர்களுக்காக ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.

புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் சிவராஜ்குமார், அங்கிருந்து புத்தாண்டு நாளில் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக்கொண்டிருப்பதோடு, புற்றுநோய் சிகிச்சையை தான் கடந்துவந்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

கன்னட திரையுலகின் நட்சத்திர நடிகராக இருந்து வரும் சிவராஜ்குமார், புற்றுநோய் பாதித்து அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

சிவராஜ்குமாரின் சிறுநீர் பையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோது அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர்.

இந்த நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்வதாக அறிவித்தார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த டிச.26ஆம் தேதி அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

இந்த அறுவைசிகிச்சையில் புற்றுநோய் பாதித்திருந்த சிறுநீர் பை அகற்றப்பட்டு, செயற்கை முறையில் சிறுநீர்பை ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

அறுவை சிகிச்சை நடைபெற்று ஒரு வார காலத்துக்குப் பிறகு, சிவராஜ்குமார், தனது மனைவியுடன் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டுள்ளார்.

அதாவது, நான், புற்றுநோயிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரசிகர்களாகிய உங்களின் பரிபூரண ஆசியால்தான் இன்று நான் குணம் அடைந்துள்ளேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் பலித்துவிட்டது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் குணமடைந்து, நாடு திரும்புவேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும், எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அதிக உத்வேகம் கொடுத்தனர். தற்போது நடித்துக் கொண்டிருந்த 45 படத்தின் படிப்பிடிப்பின்போது கூட நான் கீமோதெரபி எடுத்துக்கொண்டிருந்தேன். சிகிச்சைக்காக அமெரிக்கா வந்தபோதும், நான் மிகுந்த பதற்றத்தில் இருந்தேன். என் மனைவியும், மகளும்தான் எனக்கு உற்றத் துணையாக இருந்தனர் என்று கூறியுள்ளார்.

பின்னர் பேசிய அவரது மனைவி கீதா, மருத்துவப் பரிசோதனைகள் மூலம், அவர் புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது முழுக்க முழுக்க ரசிகர்களின் ஆசியால்தான் நடந்தது என்பதை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன் என்றும் உணர்ச்சிப்பூர்வமாகக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *