‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்! | Nayinar Nagendran slams DMK for loosing South Korean investment to Andhra

Spread the love

சென்னை: “தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன. ‘புலி வருது, புலி வருது’ என்பது போல ஒவ்வொரு முறையும் தாங்கள் முதலீடு வருகிறது என்று விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாய் செய்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது.” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “முதலீடுகளைக் கோட்டை விடும் முதல்வரே, தமிழகத்தில் ரூ.1720 கோடி முதலீடு செய்யவிருந்த தென்கொரிய நிறுவனம் ஹ்வாசங், தற்போது தமிழகத்தை விட்டு ஆந்திராவில் முதலீடு செய்யவிருப்பதாய் அறிவித்த சேதி அறிவீர்களா?

‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’ என்று வீண் பேச்சு பேசும் முதல்வரே, உங்கள் விடியா அரசாங்கத்தின் விளைவாகத் தான் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன. ‘புலி வருது, புலி வருது’ என்பது போல ஒவ்வொரு முறையும் தாங்கள் முதலீடு வருகிறது என்று விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாய் செய்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது.

முதலீட்டை ஈர்க்கிறேன் என வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவது, தானாகக் கிடைத்த முதலீட்டையும் எந்தவொரு முயற்சியும் எடுக்காது கோட்டை விடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிதைப்பது என மும்முரமாக இருக்கும் நீங்கள், மீண்டுமொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது முதல்வரே.” என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *