'புளித்துப் போன காமெடி பண்ணாதீங்க.!'- ஸ்டாலினின் இந்தி திணிப்பு பதிவுக்கு அண்ணாமலை பதிலடி

Spread the love

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்தற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!

இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இழிவான செயலில் ஒன்றிய பாஜக அரசு!

‘மொழி ஒன்று – வரிவடிவம் மூன்று’ எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்துள்ளனர்.

வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயரைத் திணித்து விட்டனர்.

குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.

சரியான பாடம் புகட்ட வேண்டும்!

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ ஆகிவிட்டது.

மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.

கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!

தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

புளித்துப் போன காமெடி

ஸ்டாலினின் இந்தப் பதிவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக்காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?

இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?” என்று சாடியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *