திருவள்ளூர் / காஞ்சிபுரம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால் புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது; பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு, வடகிழக்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 15-ம் தேதி முதல் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது. நீர்வரத்து குறைந்ததால், கடந்த மாதம் 29-ம் தேதி புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன் தினம் பரவலாக பெய்த மழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 6 மணியளவில் நீர்வரத்து, விநாடிக்கு 925 கனஅடியாக இருந்தது. இதனால், 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்இருப்பு 2,954 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்ட உயரம் 19.71 அடியாகவும் இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை 5 மணியளவில் விநாடிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.
பூண்டி ஏரியிலிருந்தும் கடந்த மாதம் 15-ம் தேதி மதியம் முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை 6 மணியளவில் பூண்டி ஏரிக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து விநாடிக்கு 1,280 கன அடியாகவும், ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 1,000 கனஅடியாகவும் இருந்தது.
இதனால், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்இருப்பு, 2,742 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்ட உயரம், 33.74 அடியாகவும் இருந்தது. நேற்று மதியம் 2 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. புழல், பூண்டி ஏரிகளின் உபரிநீர் செல்லும் கால்வாய், கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள ஓடுதளப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள குணகரம்பாக்கம் தரைப்பாலத்தை மூழ்கடித்திருப்பதால் அச்சத்துடன் அந்தப் பாலத்தை மக்கள் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய இடத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், அது வெள்ள அபாயத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் நீர்நிலைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிடும் என்றும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.