சென்னை: புழல் சிறையில் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு மேற்கொள்ள வசதிகள் குறித்தும், ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் குழுவை அமைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகளை வழக்கறிஞர்கள் வழக்கு நிமித்தமாக சந்திக்க ஆன்லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். கைதிகளுடன் இண்டர்காமில் மட்டுமே வழக்கறிஞர்கள் பேச வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை சிறைத்துறை நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இதன்மூலம் கைதிகளுக்கான சட்ட உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டுப்பாடுகளை நீக்கி, வழக்கறிஞர்கள் கைதிகளுடன் சுதந்திரமாக நேரில் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ஆனந்தகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: புழல் சிறையில் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது சிறைத் துறை அதிகாரிகளின் கடமை. வழக்கறிஞர்ளுக்கும், கைதிகளுக்கும் இடையிலான உரையாடல் வெளிப்படையாக, நேரடியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கான அரசியலமைப்பு சட்ட உரிமைகள் காக்கப்படும்.
ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே உள்ளது.
எனவே, கைதிகளின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் புழல் சிறைக்கு செல்லும் வழக்கறிஞர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வழக்கறிஞர் கே.வி.முத்துவிசாகன், தமி்ழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வேணு.கார்த்திக்கேயன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் அதன் தலைவர் எம்.பாஸ்கர், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் என்.எஸ்.ரேவதி, லா அசோசியேஷன் சார்பில் அதன் தலைவர் பி.செல்வராஜ், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், சிறைத்துறைத் தலைவர் சார்பில் சிறைத்துறை டிஐஜி ஏ. முருகேசன், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ். காசிராஜன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழுவினர் வரும் நவ.16-ம் தேதியன்று புழல் சிறையில் நேரடி களஆய்வு மேற்கொண்டு அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய வசதி, வாய்ப்புகள் குறித்து வரும் நவ.21-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குறி்ப்பாக வழக்கறிஞர்கள் கைதிகளை சுதந்திரமாக சந்தித்து அவர்களுக்கான குறைகளைக் கேட்க முடிகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
தவிர தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்கள், சிறைத்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் தனிப்பட்ட முறையில் தங்களது அறிக்கையையும் தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.