திருவள்ளூர்/நந்திவரம்/காஞ்சி: வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சென்னை குடிநீர் ஏரிகளான பூண்டி ஏரியில் இருந்து, விநாடிக்கு 4,500 கன அடி, புழல் ஏரியில் இருந்து, விநாடிக்கு 750 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவில் நீர் வரத்து தொடங்கியதால், பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 15-ம் தேதி மதியம் முதல் பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
நேற்று காலை 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,536 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம், 33.05 அடியாகவும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து விநாடிக்கு 2,510 கன அடியாகவும் இருந்தது.
ஆகவே, நேற்று காலை 10 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 4,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் தரும் மற்றொரு ஏரியான புழல் ஏரிக்கு, வடகிழக்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 15-ம் தேதி மதியம் முதல் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று காலை 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,745 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம் 18.67அடியாகவும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து விநாடிக்கு 860 கன அடியாகவும் இருந்தது. நேற்று மதியம் 2 மணியளவில், புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 750 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில், உள்ள நந்திவரம் ஏரி நிரம்பி குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. கூடுவாஞ்சேரி அருகே காயரம்பேடு ஊராட்சி, விஷ்ணு பிரியா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், பொன்மார் ஊராட்சியில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
தாம்பரம், அதன் சுற்றுவட்டார பகுதிகள், காரணைபுதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், பெருமாட்டு நல்லூர் ஊராட்சியிலுள்ள, செல்வி நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா நேற்று பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். இதன் முழு நீர்மட்டம் உயரம் 24 அடி ஆகும். தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து காரணமாக ஏரியின் நீர் மட்டம் 21 அடியை நெருங்கியது. நேற்று ஏரியில் இருந்து, விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி, ஆட்சியர் கலைச்செல்வி, சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பார்வையிட்டனர்.