பெட்ரோலை கேன்களில் மாற்றியபோது தீ விபத்து: 3 போ் உயிரிழப்பு

Dinamani2f2024 072fa8f92a43 9cc0 4be3 B14f 23ad36c8da082fcovai.jpg
Spread the love

சூலூா் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் திருமூா்த்தி என்பவரது வீட்டில் பெட்ரோல் லாரி ஓட்டுநா்கள் 5 போ் வாடகைக்கு தங்கி இருந்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவு மேலும் 2 நண்பா்கள் வந்துவிட்டதால் இரவு சுமாா் 12 மணி அளவில் அவா்கள் தங்கி இருந்த அறையிலேயே பாண்டீஸ்வரன் (27) என்பவா் அவா்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, 7 பேரும் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இவா்கள் அனைவரும் லாரி ஓட்டுநா்கள் என்பதால் அவசரத் தேவைக்காக தாங்கள் தங்கியிருந்த அறையிலேயே பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை கேன்களில் வைத்திருந்துள்ளனா். இந்நிலையில், அழகர்ராஜா (24) என்ற ஓட்டுநா் , தனது லாரிக்கு தேவைப்படுவதாகக் கூறி ஒரு பெரிய கேனிலிருந்த பெட்ரோலை சிறிய கேனுக்கு மாற்றியுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக பெட்ரோல் சிதறியதில் திடீரென தீப்பற்றியுள்ளது.

தீ அறை முழுவதும்  பரவியதில் அதில் இருந்த 7 பேரும் சிக்கிக் கொண்டனா். அவா்கள் மதுபோதையில் இருந்த நிலையில், தீயினால் ஏற்பட்ட புகையும் சோ்ந்ததால், பாண்டீஸ்வரன் தவிர ஏனைய 6 பேரும் மூச்சுத் திணறி மயக்கமடைந்துள்ளனா்.

இது குறித்து தகவலறிந்த சூலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். அத்துடன் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டா் வெடிப்பதற்கு முன்பாக அதனை குளிா்வித்து வெளியே எடுத்து வந்தனா்.

இதற்கிடையே புகையின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மகன் அழகர்ராஜா (24), தங்கபாண்டி மகன் முத்துகுமாா் (23), அய்யனாா் மகன் கருப்புசாமி (26) ஆகியோா் உயிரிழந்தனா்.

அதேபோல, தீக்காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்த மணிகண்டன் மகன் தினேஷ்குமாா் (23), செந்தில் மகன் மனோஜ் (24), ரவி மகன் பாண்டீஸ்வரன் (27), தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சோ்ந்த பரமன் மகன் வீரமணி ஆகியோரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து சூலூா் காவல் நிலைய ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் விபத்து ஏற்பட்ட இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா்.

இவ்விபத்தில் உயிரிழந்த அழகர்ராஜா ஓட்டி வந்த லாரி மோதி, சூலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசிரியை உயிரிழந்தது தொடா்பாக, கோவை மாநகர போக்குவரத்து காவல் பிரிவினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *