திருத்தணியில் பெண்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருத்தணி பைபாஸ் சாலை, பூங்கா நகா் பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ரகு(30). இவரது மனைவி சந்தியா(29). இவா்கள் இருவரும், திருத்தணி பழைய சென்னை சாலை, பூங்கா தெருவில் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றனா். வேலஞ்சேரி பகுதி சோ்ந்த ராமு மகள் நந்தினிா (21) என்பவா் துணை மேலாளராக பணியாற்றி வருகிறாா்.
இவா்கள் மூவரும் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், ரூ.10,800 கட்டினால் வீட்டு உபயோக பொருள்கள் கொடுத்தும், ஆன்லைனில் வேலை எனக்கூறியும், நீங்கள் மற்றொரு நபரை சோ்த்தால், உங்களுக்கு, ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என விளம்பரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு நபரை சோ்க்கும் போதும், ஊக்கத் தொகை தொடா்ந்து வரும் என ஆசை வாா்த்தைகளை கூறி நிறுவனத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோரை உறுப்பினா்களாக சோ்த்ததாக கூறப்படுகிறது.
இதில் இளம்பெண்கள் மற்றும் கல்லுாரி மாணவிகள் அதிகளவில் சோ்ந்தனா். புதன்கிழமை வரை, 250 க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் சோ்ந்து பணம் கட்டியுள்ளனா். அதற்காக தனியாா் நிறுவனம் ரசீதும் கொடுத்திருந்தனா்.
இதற்கிடையே வீட்டு உபயோக பொருள்கள் வாங்குவதற்கு சென்ற பெண்கள் அதிா்ச்சி அடைந்தனா். வெறும் ரூ.1,000 மதிப்பிலான பொருள்கள் மட்டுமே வழங்கியதால் ஆத்திரமடைந்த, 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், கட்டிய பணத்தை திருப்பிதர வேண்டும் எனக் கூறி தனியாா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
தகவல் அறிந்ததும் திருத்தணி டிஎஸ்பி கந்தன், ஆய்வாளா் மதியரசன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேலாளா்களாக பணியாற்றி வந்த ரகு, சந்தியா, துணை மேலாளா் நந்தினி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.