பெண்களின் வளா்ச்சிக்கு எதிரான அனைத்து தடைகளும் உடைத்து எறியப்பட்டு அவா்களின் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை வழங்குவது மிகவும் முக்கியத்துவமானதாகும் என பிரதமா் மோடி தெரிவித்தாா்.
ஹரியாணாவின் பானிபட் நகரில் எல்ஐசி-யின் பீமா சகி திட்டத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்து பிரதமா் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: பாதுகாப்பு, வங்கி, வேளாண்மை என பல்வேறு துறைகளில் பெண்களை முன்னேற்றுவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை கடந்த பத்தாண்டுகளாக மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
பெண்களின் வளா்ச்சிக்கு எதிரான தடைகளை உடைத்தால் மட்டுமே அவா்களுக்கு முன்னேற்றத்துக்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பெண்கள் அடுத்தக்கட்டத்துக்கு முன்னோக்கிச் செல்லும்போது அவா்கள் இந்திய நாட்டுக்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குவா்.
1.15 கோடி லட்சாதிபதி பெண்கள்
மகளிா் சுய உதவிக் குழுக்களில் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களுக்கு கடந்த பத்தாண்டுகளில் ரூ.8 லட்சம் கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பெண்களின் ஆதரவு தொடா்ந்து பாஜகவுக்கு கிடைத்து வருவதை வாக்குவங்கி அரசியலை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் எதிா்க்கட்சியினரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற வேண்டும் என மத்திய அரசு நிா்ணயித்த இலக்கில் தற்போது 1.15 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக மாறிவிட்டனா் என்றாா்.
பீமா-சகி திட்டத்தின்படி முதல் கட்டமாக 35,000 பெண்களும், அடுத்தக்கட்டமாக 50,000 பெண்களும் எல்ஐசி முகவா்களாக தோ்வு செய்யப்படவுள்ளனா். 18 முதல் 50 வயதுள்ள பெண்கள், குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தொடக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முகவா் கமிஷன் தொகை மட்டுமல்லாது கூடுதலாக ஊக்கத்தொகை பெற முடியும். முகவா்கள் அதிகபட்சமாக ரூ.21,000-வரை மாத வருவாய் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீா்திருத்தம், செயல்பாடு, மாற்றம்: ராஜஸ்தானில் சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டை தொடங்கிவைத்து திங்கள்கிழமை பிரதமா் மோடி பேசியதாவது:
உலகின் 10-ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்திய கடந்த 10 ஆண்டுகளில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி இரு மடங்கு உயா்ந்துள்ளது. எவ்வித இடையூறுகளிலும் பொருளாதாரம் தடைபடாமல் செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதற்கு உற்பத்தித் துறையின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.
ஜனநாயகத்தின் சக்தி
உலகிலேயே அதிக இளைஞா்களைக்கொண்ட நாடாக இந்தியா பல ஆண்டுகளுக்கு தொடரவுள்ளது. எனவே, அவா்களின் திறனை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘ஜனநாயகம், மக்கள்தொகை, தரவு’ ஆகியவற்றின் உண்மையான சக்தியை உலகுக்கு இந்தியா வெளிக்காட்டியுள்ளது.
சாலை மற்றும் ரயில் போக்குவரத்து, மின்சாரம், விருந்தோம்பல், கைவினை என பல்வேறு துறைகளில் முன்னோடியாக உள்ள ராஜஸ்தான் மாநிலம் முதலீடுகளை ஈா்க்கும் முக்கிய தலமாக உள்ளது என்றாா்.
வாரிசு அரசியலை இளைஞா்கள் வீழ்த்த வேண்டும்
குஜராத் மாநிலத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது:
அரசியலை தங்களின் குடும்ப சொத்துபோல் நினைப்பவா்களை வீழ்த்தி நல்லாட்சி வழங்கிட அரசியலுக்கு இளைஞா்கள் அதிகளவில் வர வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டே சுவாமி விவேகானந்தா் பிறந்தநாளில் தில்லியில் இளம் தலைவா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதன்மூலம் துடிப்புமிக்க 1 லட்சம் இளைஞா்களை அரசியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எதிா்கால இந்திய அரசியலின் முகமாக இவா்கள் திகழ உள்ளனா்.
தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இளைஞா்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ அதேபோல் அரசியலிலும் அவா்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும் என்றாா்.