“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு திமுக கொடிதான் லைசன்சா?” – ஈசிஆர் சம்பவத்தில் இபிஎஸ் தாக்கு | ECR incident – EPS urges arrest of all those involved in the crime

1348848.jpg
Spread the love

சென்னை: ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை மறித்து, கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் “இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது” என்று காவல் துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.

பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா? குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல் துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்துதான் செயல்படுமா? யார் அந்த சார் என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த ஸ்டாலின், இந்த சார்-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்?

மாநிலத்தின் பிரதான சாலையான ஈசிஆரில் பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இந்த வழக்கில், நேர்மையாக எஃப்.ஐ.ஆர். பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதி செய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *