பெண்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம் | Supreme Court Justice MM Sundresh Praise Women for Arguments

1377243
Spread the love

‘இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது’ என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம் சூடினார்.

சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 62ம் ஆண்டு விழா உயர்நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவர் ஆர்.ராஜலட்சுமி வரவேற்றார். சங்கத் தலைவர் என்.எஸ்.ரேவதி தலைமை வகித்தார். செயலாளர் ஏ.பர்வீன் ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, “எந்த சமுதாயத்தில் பெண்களின் நிலைப்பாடு உயர்ந்திருக்கிறதோ அந்த சமுதாயம் தான் உயர்ந்த சமுதாயம். அந்த வகையில் தமிழ் சமுதாயம் பெண்கள் சார்ந்த வளர்ந்த, உயர்ந்த சமுதாயம். பெண்களுக்கு இயற்கையாகவே வாதாடும் திறமை உண்டு. அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது என்பதை வீட்டிலேயே தினமும் அனுபவித்து வருகிறோம்.

அந்தக் காலத்திலேயே பெண்கள் கல்வியிலும். செல்வத் திலும் ஆண்களுக்கு சமீமாக. பிரதானமாக திகழ்ந்துள்ளனர். அதனால் தான் நீதித் துறையிலும் நீதி தேவதை, நீதித்தாய் என புகழாரம் சூடுகிறோம். அதேபோல தவறைச் சுட்டிக்காட்டும் போர்க் குணமும் பெண்களுக்கு உண்டு. பணிபுரியும் பெண்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் பல் வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இது மாறுகின்ற கால கட்டம். அதற்கேற்ப நம்மை நாமே தயார் படுத்தி கொள்ள வேண்டும்.

பெண்கள் உலகம் போற்றும் தத்துவ ஞானி ஒளவையார் போல தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீதித் துறையில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய சூழல் தற்போது இல்லை. விவாகரத்து வழக்குகளும், சைபர் குற்றங்கள் போன்ற வணிக குற்றங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன.

இந்த சமூக மாற்றம் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அற்புதமான காலகட்டம். பெண் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி பணியிடங்களில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. உண்மையில் அனைத்து தரப்புக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதால், நாங்கள் நினைப்பதை சில நேரங்களில் செயல்படுத்த முடியவில்லை” என்றார்.

மற்றொரு சிறப்பு விருந்தினரான உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசும்போது, ‘பெண்கள் குடும்பத்தை மட்டுமே நிர்வகிக்க தெரிந்தவர்கள் எனக் கூறுவது சரித்திர பிழை. பெண் சமுதாயத்துக்கு ஆட்சி புரியவும் தெரியும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக்காட்டியுள்ளனர். பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தியாவிலேயே முதல் பெண் வழக்கறிஞராக பதிவு செய்தவர் கார்னிலியா.

அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இந்த சமுதாயம் எப்போது பெண்களை மதிக்க கற்றுக் கொள்கிற்தோ அப்போது தான் மண்ணும், நாடும் உயரும் என்பது பாரதியின் கூற்று. அதற்கேற்ப பெண்கள் சமூக. பொருளாதார, கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் மேலோங்கி வர வேண்டும். சமூகமும், காலமும் ஒன்றாக நிலைத்து நிற்பதில்லை. அகவே பெண் வழக்கறிஞர்களின் நோக்கமும், 3 செயல்பாடுகளும் அறிவு சார்ந்த வாய்ப்புகளை உருவாக்குவதாகம் இருக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பேசுகையில், நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் தான் அதிக எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் கொண்ட சங்கம் என்றும், தமிழக பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு தடைகளைத் தாண்டி திறமைகளை வளர்த்து முன்னேறி வருவதாகவும் புகழாரம் சூட்டினார்.

விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார். அனிதா சுமந்த் ஆகியோரும் சிறப்பித்து பேசினர். நிகழ்வில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். நிறைவாக பெண் வழக்கறிஞர்கள் சங்க நூலகர் மார்கரேட் லாரன்ஸ் நிகழ்வை தொகுத்து வழங்க, பொருளாளர் மணியம்மாள் நன்றி கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *