பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார்களில் போலீஸார் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.
மதுரையில் நேற்று காவல் துறையினருக்கான குறைதீர் முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று டிஜிபி சங்கர் ஜிவால் பேசியதாவது: சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, குற்றத் தடுப்பு தொடர்பாக ஏடிஎஸ்பி, டிஎஸ்பி-க்களுடனும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
காவல் நிலையங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிரப் புலனாய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் புகார்கள் தொடர்பாக போலீஸார் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கைகு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதேபோல, போதைப் பொருள் தடுப்பிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்களைக் கடத்துவது குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்து, அதைத் தடுக்க வேண்டும்.
சைபர் க்ரைம் குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகாரித்துள்ளன. எனவே, சைபர் க்ரைம் குற்றங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. காவல் துறையினரின் நலன் நலன் வேண்டி வழங்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை குறித்த தகவல்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு டிஜிபி பேசினார்.
நிகழ்ச்சியில், தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மதுரை ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.