"பெண்கள் பாதுகாப்பு: அடித்துச் சொல்கிறேன் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது!"– முதல்வர் ஸ்டாலின் விளாசல்

Spread the love

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றது. கனிமொழி தலைமை தாங்கிய இந்த மாநாட்டில், 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

திமுக மகளிர் மாநாடு - ஸ்டாலின்
திமுக மகளிர் மாநாடு – ஸ்டாலின்

அவர் உரையில், “வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பாஜக கூட்டணிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான போர். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடி, இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அபாண்டமான பொய்யைக் கூறிச் சென்றுள்ளார். மணிப்பூரில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஊரை விட்டு வெளியேறியபோது டபுள் இன்ஜின் பா.ஜ.க அரசு வேடிக்கை பார்த்தது. ஆனால், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான முதல் 25 நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவை உட்பட தமிழகத்தின் 7 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என அடித்துச் சொல்கிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. தேர்தல் நேரத்தில் மட்டும் இந்தியாவுக்கு வரும் பிரதமர், தமிழக மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் பழைய கண்டென்ட்டையே பேசிச் சென்றுள்ளார். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லா பயணத்தை உறுதி செய்தது. 1 கோடியே 30 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. 5 லட்சம் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தால் பயனடைகிறார்கள். இந்த மகிழ்ச்சி பெண்களின் முகத்தில் தெரிவதே எங்கள் ஆட்சியின் வெற்றி.

திமுக மகளிர் மாநாடு - ஸ்டாலின்
திமுக மகளிர் மாநாடு – ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், பதவி சுகத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு சுயநலக் கூட்டணி. டெல்லிக்கு ரகசியமாகச் சென்று மிரட்டல்களுக்குப் பணிந்து உருவான இந்த ‘பிளாக்மெயில்’ கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். பா.ஜ.க-வின் எடுபடிகளாக இருந்து தமிழகத்தை ஆள நினைப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மறைத்துவிட்டு, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்ப பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை.” எனக் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *