சென்னை: ‘தமிழகத்தில் பெண்கள் மீது கை வைத்தால் அவர்களுக்கு கைஇருக்காது’ என கோவை மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிர் அணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணைத் தலைவர் குஷ்பு ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் சதீஷ்குமார், சுமதி வெங்கடேசன் உட்பட மாநில, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: திமுக அரசு பெண்களின் பாது
காப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இதைப்பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல், முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் இன்று இருக்கும் சூழ்நிலைக்கு நீங்கள் யாரையும் சுட்டுப்பிடிக்க வேண்டாம். இன்னும் கொஞ்ச நாட்களில் நாங்கள் எல்லோரும் கைகளில் துப்பாக்கி வைத்துக்கொண்டு, சுட வேண்டிய சூழ்நிலைதான் உருவாகும். பெண்கள் ஆயுதத்தை எடுக்கவேண்டிய காலம் தமிழகத்தில் வந்திருக்கிறது. தமிழகத்தில் காவலர்கள்தான் செயலாற்றவில்லை. பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கிய ‘காவலன் செயலி’யாவது செயலாற்றுகிறதா என சோதனை செய்யப் போகிறோம். பெண் குழந்தைகளைப் பெற்றுவிட்டு எல்லோரும் சும்மா இருப்பார்களா? இனி தமிழகத்தில் ஒரு பெண் மீது கை வைத்தால், அவர்களுக்கு கை இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
குஷ்பு கூறும்போது, ‘பெண்கள் எல்லோரும் வெளியே சென்று வீட்டுக்கு திரும்பி வரும்வரை, வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்களுக்காக நடந்த நல்ல விஷயங்கள் எதையாவது சொல்ல முடியுமா? திமுக ஆட்சியில் ஒரு ஆண்டில் 450 முதல் 470 வரை பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது” என்றார்.