பெண்கள் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது விதிமுறைகள் என்ற பெயரில் டெஸ்டோஸ்டெரான் அளவு அதிகமாக இருப்பதை காரணம் காட்டி அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. போட்டியில் கலந்துகொள்ளும் பெண்களை, ஆண்கள் அல்லது மாற்று பாலினத்தவர்கள் என்று குற்றச்சாட்டப்படுவதாகவும் பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் பாலின சரிபார்ப்பு வேறுபடுவது ஏன்?
கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு மாறுபட்ட பாலின வளர்ச்சி உடைய பெண்கள் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான விதிமுறைகள் உலக தடகளப் போட்டிகளில் கடுமையாக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பெண்களின் டெஸ்டோஸ்டெரான் அளவு லிட்டருக்கு 2.5 நானோ மோலுக்கும் குறைவாக 6 மாதங்களுக்கு இருக்க வேண்டும் என விதிமுறை கடுமையாக்கப்பட்டது. இதனால், போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பெண்ணின் டெஸ்டோஸ்டெரான் அளவு அதிகமாக இருந்தால், அவர் அதனைக் குறைக்க மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
தடகளப் போட்டிகள் மட்டுமல்லாது நீர் சார்ந்த விளையாட்டுகள், சைக்கிளிங், கால்பந்து போட்டிகளிலும் டெஸ்டோஸ்டெரான் அளவு போட்டிகளுக்கு ஏற்றவாறு எந்த அளவில் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுக் குழு இந்த விவகாரத்தில் அதிகம் அக்கறை காட்டுவது ஏன்?
போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சரியான மற்றும் நியாயமான போட்டிக் களத்தை ஏற்படுத்தித் தருவதில் விளையாட்டுக் குழு கவனம் செலுத்துகிறது. மேலும், உடல் வலிமை சம்பந்தப்பட்ட விளையாட்டுகளான குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம்.
செமன்யா வழக்கில் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தின் 3 பேர் அடங்கிய நடுவர் மன்றம் 2-1 என அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினர். போட்டி நியாயமாக நடைபெறுவதை உறுதிசெய்ய, சில நேரங்களில் பாகுபாடு பார்க்க வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டனர்.
இருப்பினும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டெரான் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக எந்த ஒரு விதிமுறையும் இல்லை. அதேபோல டெஸ்டோஸ்டெரான் அளவு சீராக இருக்கும் பெண்கள் இந்த தீர்ப்பினால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்த பாலின அடையாள விவகாரம் பூதாகரமானதையடுத்து, ஒலிம்பிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ், டெஸ்டோஸ்டெரான் அளவு அதிகம் உள்ள பெண்கள் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளவர்கள் என்பது உண்மை கிடையாது என்றார்.
பாலின சோதனை தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழு கூறுவதென்ன?
ஸ்வீடனை மையமாக வைத்து இயங்கும் சர்வதேச ஒலிம்பிக் குழு அதற்கென தனி விதிமுறைகளை வகுத்துள்ளது. இருப்பினும், ஒலிம்பிக்கில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் ஃபிபா மற்றும் உலக தடகள அமைப்பு போன்ற சில சுதந்திரமான அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுவதை உறுதிசெய்ய அவர்கள் சில விதிமுறைகளைக் கொண்டுள்ளனர்.
பாலினம் தகுதி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சர்வதேச ஒலிம்பிக் குழு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிட்டது. போட்டி நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யவும், பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. ஆனால், பாரீஸ் ஒலிம்பிக்கின் குத்துச்சண்டை போட்டியில் சர்ச்சை உருவானது.