பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?

Spread the love

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப்(44). மதுவுக்கு அடிமையான காரணத்தால் ஆசிரியர் பணியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே ஒரு அடிதடி வழக்கில் சிக்கிய சந்தீப்பை 2023-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இரவு  போலீஸார் கைதுசெய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மறுநாளான 10.05.2023 அன்று மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கரை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த பயிற்சி மருத்துவர் டாக்டர் வந்தனா தாஸ் (22) என்பவரை சந்தீப் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தார். மருத்துவமனையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து டாக்டர் வந்தனா தாஸின் கழுத்து மற்றும் முகம் உள்ளிட்ட சுமார் 11 இடங்களில் குத்தியதுடன், அங்கிருந்த மருத்துவமனை காவலாளி மற்றும் போலீஸார் உள்ளிட்டவர்களையும் குத்தியுள்ளார். அங்கிருந்தவர்கள் சந்தீபை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். டாக்டர் வந்தனா தாஸை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் மரணம் அடைந்தார்.

கொலை செய்யப்பட்ட இளம் மருத்துவர் வந்தனா தாஸ்

கொலை செய்யப்பட்ட இளம் மருத்துவர் வந்தனா தாஸ்

கோட்டயம் குறுப்பந்தரை பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸின் ஒரே மகளான டாக்டர் வந்தனா தாஸ் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் அந்த சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை பாதுகாப்பு அவசரச் சட்டம் 2012-ல் திருத்தம் கொண்டுவரப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். போலீஸ் கையில் துப்பாக்கி எதற்கு என ஐகோர்ட் அந்த சமயத்தில் விமர்சித்திருந்தது. கேரளாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய டாக்டர் வந்தனா கொலை வழக்கு கொல்லம் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் 70 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். 207 ஆவணங்களும், 23 தடயங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. கேரள மாநிலத்தில் முதன் முதலாக மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கொலைச் செய்யப்பட்ட இந்த வழக்கை கொல்லம் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பி.என்.வினோத் விசாரித்து, சந்தீப்பிற்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆயுள் காலக் கடுங்காவல் தண்டனையும், 2.35 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையில் ஒரு லட்சம் ரூபாயை டாக்டர் வந்தனா தாஸின் குடும்பத்திற்கும், மீதமுள்ள 1.35 லட்சம் ரூபாயைத் தாக்குதலுக்குள்ளான ஹோம் கார்டு அலெக்ஸ் குட்டிக்கும் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த தீர்ப்பில் திருப்தி இல்லை எனவும், மேல் முறையீட்டுக்குச் செல்வதாகவும் டாக்டர் வந்தனாதாஸின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *