பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு: பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி | Women journalists denied entry to Taliban minister event Rahul Gandhi slams PM

1379434
Spread the love

புதுடெல்லி: டெல்லியில் நடந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பெண் பத்திரிகையாளர்களை பொது மன்றத்தில் இருந்து விலக்க அனுமதிக்கும்போது, ​​இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மிகவும் பலவீனமானவர் என்று நீங்கள் கூறுகிறீர்களா?. நமது நாட்டில், பெண்களுக்கு எல்லா இடங்களிலும் சமமாகப் பங்கேற்க உரிமை உண்டு. இதுபோன்ற பாகுபாட்டை எதிர்கொள்ளும் போது நீங்கள் அமைதியாக இருப்பது பெண் சக்தி குறித்த உங்கள் முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகிறது” என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் நெருங்கி வருவதைக் கண்டு பாகிஸ்தானும் ராகுல் காந்தியும் பதறுகிறார்கள். மீண்டும் ராகுல் காந்தி போலி செய்திகளைப் பரப்புவதன் மூலம் பாகிஸ்தானுக்காகப் போராடுகிறார்.

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் இந்தியப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட பொது நிகழ்வில் பெண் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர். ராகுல் காந்தி குடும்பம் இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளை எதிர்ப்பதன் மூலம் பாகிஸ்தானை ஆதரிக்கிறது. காங்கிரஸ் பாகிஸ்தானின் சிறந்த நண்பர்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தலிபான் அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இதில் இந்தியாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *