பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி. கார் அரசு மருத்துவமனை புதன்கிழமை நள்ளிரவு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கார் அரசு மருத்துவமனையில் பயின்ற முதுநிலை மருத்துவ மாணவி, கடந்த வாரம் இரவு பணிக்கு வந்த நிலையில், காலை கூட்ட அறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து கொல்கத்தா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஒருவரை கைது செய்த நிலையில், வழக்கு சிபிஐ போலீஸாருக்கும் மாற்றப்பட்டுள்ளது.
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் சந்தேகிக்கும் நிலையில், ஒரு வாரமாக மருத்துவர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.
கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கோரி கொல்கத்தா முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து புதன்கிழமை இரவு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் பேரணி நடத்தினர்.
இந்த நிலையில், பேரணி நிறைவு பெற்றவுடன் நள்ளிரவு 11 மணியளவில் மீண்டும் போராட்டத்தை தொடங்கிய போது, கூட்டத்தில் இருந்த சிலர் மருத்துவமனைக்குள் நுழைந்து அனைத்துப் பொருள்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவையும் நொறுக்கிய மாணவர்கள் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தால் மருத்துவமனை முழுவதும் சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அனுப்பிய குண்டர்கள்தான் மருத்துவமனைக்குள் புகுந்து ஆதாராங்களை அழித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.