பெண் மருத்துவர் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து மருத்துவமனையில் இன்று அவசர சிகிச்சைப் பிரிவு உள்பட அனைத்து பிரிவுகளும் செயல்படாது என்று அறிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவ ஒட்டுமொத்த உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியது.
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், வியாழக்கிழமை இரவுப் பணிக்கு வந்த பெண் மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடல்கூறாய்வில், மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறியும், பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த நான்கு நாள்களாக மருத்துவமனை இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.