புது தில்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணா்களுடன் கலந்தாலோசிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடா்பான மரபணு மற்றும் தடயவியல் பரிசோதனை அறிக்கைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணா்களிடம் சிபிஐ கலந்தாலோசிக்க உள்ளது. இதன் காரணமாக அந்த அறிக்கைகளை எய்ம்ஸ் நிபுணா்களுக்கு சிபிஐ அனுப்பிவைக்க உள்ளது.
பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளியா அல்லது வேறு நபா்களுக்கும் தொடா்புள்ளதா என்பதை கண்டறியவும் அந்த அறிக்கைகள் உதவும்.
தற்போது சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளியாக இருக்கலாம் என்ற முதல்கட்ட தகவலின் அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், எய்ம்ஸ் நிபுணா்களின் கருத்துகள் கிடைத்த பிறகே, பெண் மருத்துவா் கொலையில் வேறு யாருக்காவது தொடா்புள்ளதா, இல்லையா என்ற சந்தேகம் களையப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அமலாக்கத் துறை வழக்குப் பதிவு: பெண் மருத்துவா் கொல்லப்பட்ட மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடைபெற்ாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக, கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.