இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பெத் மூனியின் அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜனவரி 20) சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் விளையாடியது.
பெத் மூனி அதிரடி
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக பெத் மூனி மற்றும் ஜியார்ஜியா இருவரும் களமிறங்கினர். இந்த இணை ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், ஜியார்ஜியா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், பெத் மூனியுடன் ஜோடி சேர்ந்த ஃபோப் லிட்ச்ஃபீல்டு சிறிது நேரம் களத்தில் நீடித்தார். அவர் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 51 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.