சம்பவ இடத்தை பார்வையிட்ட திருச்சி சரக ஐ.ஜி பாலகிருஷ்ணன், “திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளைக்காளி என்ற குற்றவாளியை அழைத்துச் சென்று கொண்டிருந்தோம். வாகனங்களில் ஏற்கனவே ஆயுதம் தாங்கிய போலீஸார் இருந்தனர். இடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, மர்ம நபர்கள் வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றனர். அப்போது, பாதுகாப்புக்காக இருந்த போலீஸ் உடனடியாக குற்றவாளியை பாதுகாத்தார்.
போலீஸ் எஸ்கார்டு எஸ்.ஐ, உடனடியாக துப்பாக்கியால் குற்றவாளிகளை நோக்கி சுட்டபோது, அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தப்பி சென்றவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக ரௌடி அழகுராஜா என்பவரை போலீஸார் கைது செய்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழலில்தான், கைதான அழகுராஜா அவன் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை தேடுவதற்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றபோது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது சுடப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அழகுராஜா தாக்கியதில் ஒரு போலீஸூக்கு அரிவாள் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள். பிரபல ரௌடி மீது நாட்டுவெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவத்தில் இடுப்பட்டதாக சொல்லப்பட்ட ரௌடி ஒருவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.