கோவை: பெரியார் மண்ணில் தான், விநாயகர் சிலைகளை செய்துள்ளோம் என, பாஜக தமிழக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா பேசினார். இந்து முன்னணி கோவை வடக்கு சார்பில் துடியலூர் பகுதியில் திங்கட்கிழமை (செப்.9) மாலை நடந்த விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 150 விநாயகர் சிலைகள் வந்து சேரவில்லை. தமிழகத்தில் நடப்பது இந்து விரோத அரசு. பெரியார் மண்ணில் தான் விநாயகர் சிலைகளை செய்துள்ளோம். 1944-ம் ஆண்டில் சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் ஆங்கிலேயர்கள் வெளியேற கூடாது என தீர்மானம் போட்டனர்.
ஆங்கிலேயர்கள் வெளியேறிவிட்டால் இந்தியர்களால் குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்ற தீர்மானம் அண்ணா, பெரியார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பாஜக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்தியாவில் அணுகுண்டு தயாரித்து நமது திறமையை வெளிப்படுத்தினார்.
இன்று உலகளவில் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் கொந்தளிப்பில் உள்ளன. இங்கிலாந்தில் நடந்த கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகளில் இருந்து குடியேறிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் கையில் நாடு செல்கிறது என பேசியதாக எனது நண்பர் தெரிவிக்கிறார். உள்நாட்டு கலாச்சாரம், உள்ளூர் கலாச்சாரம் பாதிக்கப்பட்டால் அந்நிய நாட்டின் தீயசக்திகள் கையில் தேசம் சென்றுவிடும்.
அந்த சூழ்நிலை தான் மேற்கத்திய நாடுகளில் இன்று காணப்படுகின்றது. பிரதமரை வெட்டுவேன் என்று கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை கைது செய்யாதது ஏன். தமிழக முதல்வர் அவர் மீது நடவடிக்கை எடுக்ககாமல் அமைச்சராக பொறுப்பு வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.