பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக கேரளாவில் வெள்ளிக்கிழமை போராட்டம் | Protest in Kerala on Friday against Supreme Court opinion on mullaiPeriyar Dam

1348993.jpg
Spread the love

குமுளி: பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கேரள மாநிலம் குமுளியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

முல்லை பெரியாறு அணை குறித்த பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் உள்ள பல்வேறு அமைப்பினர் அணையின் பலம் குறித்த சர்ச்சை மனுக்களை அடிக்கடி தாக்கல் செய்து வருகின்றனர்.

கடந்த 28-ம் தேதி இந்த மனுக்கள் குறித்த விசாரணையில் நீதிபதி ரிஷிகேஷ்ராய் கூறுகையில், அணை கட்டி 130 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலமாகவே உள்ளது. அணை உடையும் என்பது கற்பனை கதைபோலவே உள்ளது என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழக விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வரவேற்றனர்.

இந்நிலையில் இடுக்கி எம்பி.டீன்குரியாகோஸ் தனது பேட்டியில் நீதிபதியின் கூற்று கேரளத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அணையை ஆய்வு நடத்தி கூறியதும் அல்ல. நீதிபதியின் இந்த கருத்து ஏற்புடையதல்ல. நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை தமிழகத்துக்கு சாதகமாக உள்ளது என்றார்.

இந்நிலையில், நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை குமுளியில் கேரள ஜனநாயக உரிமை பாதுகாப்பு குழு சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரள எல்லை குமுளியில் அல்ல. வண்டிப்பெரியாறில்தான் அவர்கள் போராட வேண்டும். காவல்துறை இதற்கு அனுமதி அளித்தால் நாங்களும் நீதிமன்றதுக்கு ஆதரவு தெரிவித்து குமுளியின் தமிழக எல்லைப் பகுதியில் உண்ணாவிரதம் இருப்போம் என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *