பெருங்கனவை நோக்கி பெடல்களை மிதிக்கும் கல்லூரி மாணவி – சாதிக்க தடை போடும் பொருளாதாரப் பிண்ணனி!

Spread the love

சேலம் மாவட்டம், மரவனேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹரிதா, கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளில் மாநில மற்றும் தேசிய அளவிலான மிதிவண்டி போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகள் பெற்று அசத்தியிருக்கிறார்.

ஆனால் இந்த மிதிவண்டிப் போட்டி என்பது மற்ற விளையாட்டுகள் போன்று அல்லாமல், பொருளாதார ரீதியாக வலுவான பின்னணியைக் கொண்ட போட்டியாளர்களால் மட்டுமே பங்கேற்கக்கூடிய அளவில் இருக்கிறது. இதற்கு இந்த விளையாட்டில், மிதிவண்டி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் விலை மிக அதிகமாக இருப்பதும், காரணமாக இருக்கிறது.

அதேபோல, இதற்கான போட்டியில் கலந்துகொள்ள பெரும்பாலும் இந்தியாவின் கடைக்கோடி வரை ரயில் அல்லது விமானம் மூலம் பயணித்து , உணவு, தங்குமிடம் என அனைத்திற்கும் மிகப்பெரிய அளவில் செலவு செய்தாக வேண்டும்.

அதுமட்டுமன்றி, மிதிவண்டி போட்டியில் பல வகை போட்டிப் பிரிவுகள் உள்ளன. இதில் பயன்படுத்தப்படும் ITT, Road Race, டிராக் சைக்கிள் / மவுன்ட்டைன் பைக் ஆகியவற்றின் விலை, சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை உள்ளது.

இந்த விளையாட்டு போட்டியின்‌ மிக முக்கியமான உபகரணமே மிதிவண்டியாக இருக்கும்பட்சத்தில், இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கே குறைந்தபட்சம் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிதிவண்டி தேவையென்பதால்… பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் பெற்றோர்களால் தங்கள் பிள்ளைகளுக்கு இத்தகைய விளையாட்டுகளின் மீது ஆர்வம் இருந்தாலும் ஊக்கப்படுத்தி, அவர்களைப் பங்கெடுக்கச் செய்வதென்பது பெரும் சவாலான காரியமாகவே இருக்கிறது.

ஏன் இந்தப் போட்டி மீது ஆர்வம்?

ஹரிதாவின் தந்தை ஹரிஹரன், மிதிவண்டிப் போட்டி மீது மிகுந்த ஆர்வமுடையவர்.

இந்த மிதிவண்டிப் போட்டியானது உயிரைப் பணயம் வைத்து விளையாடுவது என்பதால், தன்னுடைய மகள் ஹரிதாவிடம் `மிதிவண்டிக்கு நோ’ சொல்லியே பழகியிருக்கிறார்.

ஆனால், தந்தை தடுத்த காரணத்தினாலோ என்னமோ… ஹரிதாவுக்கு மிதிவண்டி மீதும், அது சார்ந்த விளையாட்டு துறையின் மீதும் ஆர்வம் தொற்றிக் கொண்டது.

மிதிவண்டி விளையாட்டுப் போட்டியை மையமாக வைத்து பெருங்கனவை நோக்கிப் பயணிக்கும் ஹரிதா, தன்னுடைய அனுபவத்தையும், லட்சியப் பயணத்தைக் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“சிறுவயதிலேயே இந்த விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டு, அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டேன். அதற்கு என்னுடைய பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். அவர்களின் துணையோடு சிறு சிறு உதவிகளும், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறவே, இதில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. பொருளாதார ரீதியாகப் பல தடைகள் இருந்தாலும், என்னுடைய இலக்கை நோக்கி அயராது பெடல்களை மிதித்துக் கொண்டிருக்கிறேன். இந்த சைக்கிளிங் விளையாட்டு என்பது கொஞ்சமல்ல… ரொம்பவுமே காஸ்ட்லியானது. ஆனால் அதற்கேற்ற பொருளாதாரப் பின்னணி கொண்ட குடும்பம் எங்களுடையது கிடையாது. தந்தை அலுவலக உதவியாளர், தாய் டெய்லர், இருந்தாலும் என்னுடைய பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்து, அவர்களால் முடிந்ததைச் செய்து, என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது என்னுடைய லட்சியம். ஆனால் இந்தப் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் என்னிடம் இல்லாதது, பெரும் குறையாக இருக்கிறது. தகுந்த உபகரணங்கள் கிடைத்தால் என்னால் இந்த சைக்ளிங்கில் நிச்சயம் சாதிக்க முடியும்” என, தன்னம்பிக்கை மிளிர கூறுகிறார், ஹரிதா.

கடுமையான பயிற்சிகளின் பலனாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும்… இந்திய பள்ளி விளையாட்டுகள் அமைப்பில் (SGFI) 2024 நவம்பரில் தேர்வாகி, 2025 ஜனவரியில் தேசிய அளவிலான மிதிவண்டி போட்டியில் (ITT) தனி நபர் நேர சோதனை ( Individual Time Trail) பிரிவில் தேசிய அளவில் 9-ஆவது இடம்.

2024 செப்டம்பரில் ராணிப்பேட்டையில் நடந்த மாநில அளவிலான ஓபன் மிதிவண்டி போட்டியில் தனிநபர் நேர சோதனை(ITT)மற்றும் மெகா தொடக்க போட்டி (Mass start)ல்‌ 5-ஆவது இடம், செப்டம்பர் 2024 கேலோ இந்தியா விளையாட்டு போட்டி பெண்கள் (ASMITHA) தனிநபர் நேர சோதனை (ITT)and mass Starts -ல் 8- ஆவது இடம்.

2024 அக்டோபரில் அகில இந்திய அளவில் பேசப்படும், சென்னையில் நடைபெற்ற HCL சைக்ளோத்தான் போட்டியில் தனிநபர் பிரிவில் ஓவர் ஆல் ரேக்கிங் 4-ஆவது இடமும் பெற்றுள்ளார்.

தினமும் 50 முதல் 60 கிமீ சாலையோர சைக்கிள் பயிற்சி, வார விடுமுறையில் 100கிமீ வரை… ஏற்காடு மலையில் சைக்கிள் ஓட்டியும் சில விபத்துகளில் சிக்கியும் மனம் தளராமல், 2025-ம் ஆண்டில் தன் திறமைகளை மேலும் வளர்த்துக் கொண்டார்.

இதன் பயனாக

2024ம் ஆண்டில் விட்ட இடங்களை எல்லாம் பிடித்திருப்பதை, கீழே உள்ள தகவல்கள் நமக்குச் சொல்கின்றன.

2025 நவம்பரில் செங்கல்பட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா சிட்டி லீக்கில் தங்க பதக்கமும் அதே நாள் மாலையில் நடைப்பெற்ற ரோட் சைக்கிளிங்கில் வெற்றி இலக்கை அடையும் முன் 2 கி.மீ தொலைவில் சைக்கிள் பஞ்சர் ஆகிய போதிலும், வெள்ளி பதக்கம் வென்றது நெகிழ்ச்சியூட்டியது. தமிழ்நாடு சைக்கிளிங் லீக்கில் 3-ஆவது இடமும், பெங்களூர் பை சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டியில் மண்டல அளவில் வெள்ளி பதக்கம், சென்னை வெலோரம் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற டிராக் சைக்கிளிங் போட்டியில் ஸ்பிரின்டில் வெண்கல பதக்கம், ஜடிடி -யில் வெண்கல பதக்கமும் வென்றார்.

எச்.சி.எல்(HCL) ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் வெண்கல பதக்கம், ஓபன் மாநில அளவிலான மலையேற்ற மிதிவண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம், டிசம்பரில் ஒடிசாவில் நடைபெற்ற ரோட் நேஷனல்ஸில் குழு ITT- ல் 5-ஆவது இடமும் மாஸ் ஸ்டார்டில் 20-ஆவது இடமும், உத்தரகாண்டில் நடைபெற்ற டிராக் நேஷனல்ஸ் குழு பிரிவில் 4-ஆவது இடமும் தனிநபர் நேர சோதனை(ITT) பிரிவில் 16-ஆவது இடமும் பெற்ற இவரின் பயணம், 2026-லும் தொடர்ந்து கேலோ இந்தியா (AISMITHA) தெற்கு மண்டல அளவில் தனிநபர்‌ நேர சோதனை (ITT) – மாஸ் ஸ்டார்ட் மிதிவண்டி போட்டியில் வெள்ளி பதக்கம் மற்றும் பிப்ரவரியில் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய மலையேற்ற மிதிவண்டி சாம்பியன்ஷிப் மலையேற்ற மிதிவண்டிபோட்டியில் (MTP)10 ஆவது இடம் என, நடுத்தர குடும்ப மாணவியின் இத்தனை முயற்சிகளின் மிகப்பெரிய கனவு, இந்தியா ஜெர்சி என்ற இலக்கை கொண்டது.

தான் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவரிக்கும் ஹரிதா,

“முதலில் போட்டியில் பங்கேற்க அந்த மிதிவண்டியை வாங்குவதே மிகப்பெரிய சவாலாகும். பெரும் வசதி கொண்ட குடும்பத்தில் இது வெறும் விளையாட்டாகப் பார்க்கலாம். ஆனால், நடுத்தர குடும்பத்தினைச் சேர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு இது பெரும் கனவாகும். இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற முதலில், சிறுசிறு மிதிவண்டி பழுதுகளுக்குக்கூட பெரிய அளவிலான தொகை செலவிட வேண்டிய நிலை உள்ளது.” என்கிறார்.

ஹரிதாவின் பெற்றோர், “போட்டிக்குத் தயாராக மாதம் நியூட்ரிஷனுக்கு சுமார் ₹7000, பயிற்சியாளருக்கு மாதம் ₹5000, ஜிம்முக்கு மாதம் ₹2000… இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, மிக முக்கியமாக ஒரு போட்டியில் பங்கேற்க பயணம், உணவு மற்றும் தங்குமிடம் என மொத்தமாக சுமார் 40,000 முதல் 50,000 ரூபாய் வரை செலவாகிறது. மேலும், மாநில அளவில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு ஒரு சிறிய பயிற்சி முகாம்கூட ஏற்பாடு செய்யப்படுவதில்லை.

சாய் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினை சேர்ந்த வீரர்களுக்கு அரசு முழு செலவையும் ஏற்கிறது.

ஆனால், அதற்கான விளையாட்டு செலக்ஷன்கள் 13 மற்றும் 15 வயத்துக்குள்ளாகவே முடிவடைந்து விடுகிறது. அதற்கு மேலான வயது பிரிவினருக்கு, இந்த அமைப்புகளுக்குள் செல்ல தேசிய அளவில் பதக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ஒரு முக்கியமான சிக்கலே இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்கே நவீன மிதிவண்டி அவசியமான ஒன்றாக உள்ளது. அதுவே 7 முதல் 12 லட்சமாக உள்ளது. நவீன முறையில் வடிவமைப்பு கொண்ட மிதிவண்டியோடு போட்டியில் பங்கேற்பவர்களுக்கு பதக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது. இத்தகைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது” என்றனர்.

தீர்வுதான் என்ன?!

தமிழ்நாடு அரசு விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை சமீபத்தில் நம்மால் காண முடிகிறது. மாநில அளவில் பதக்கம் வெல்லும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் தாண்டி, திறமையான மற்ற பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளையும் தேர்வு செய்ய வேண்டும். அவர்களின் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சி தேவைகளை அரசு ஏற்கும் பட்சத்தில்… பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் திறமைமிக்கவர்களும், விளையாட்டில் பிரகாசித்து, அரசுகளுக்கு நிச்சயம் பெருமை சேர்ப்பார்கள்.

அதேபோல, தொண்டு நிறுவனங்களும், உதவும் மனம் படைத்தவர்களும் இது போன்றவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவலாம்.

மாநில அளவில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தயாராகும் ஹரிதா போன்ற தகுதிவாய்ந்த வீராங்கனைகள், வீரர்களுக்கு அரசு சார்பில் முயற்சி முகாம்கள் நடத்தினால், அது தேசிய அளவிலான அவர்களின் பாய்ச்சலுக்குப் பக்கபலமாக அமையும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *