ஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பணிகளை தொடங்காததால், சுற்றுவட்டார கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகம் 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சிப்காட் வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் இணைந்து, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த அமைப்பின் சார்பில், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று ரூ.46 கோடி மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த திட்டம் மூலம், தற்போது நல்லா ஓடையில் வெளியேறும் மாசடைந்த கழிவு நீராலும், கசிவு நீராலும், ஏற்கெனவே மாசுபட்ட நிலத்தடி நீரை சுத்திகரித்து, மீண்டும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 20 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் இந்த பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது.
தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் 2023 நவம்பர் 20-ம் தேதி அரசாணை (அரசாணை எண்:218) வெளியிடப்பட்டது.
அதற்கு அடுத்த நாள் (21-ம் தேதி) பெருந்துறை சிப்காட்டுக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். ‘பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இன்னும் 6 முதல் 8 மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொது சுத்திகரிப்பு நிலையம் இயங்கத் தொடங்கும்’ என அரசாணை நகலை வெளியிட்டு அறிவிப்பு செய்தார். ஆனால், அதன் பின்பும் நடவடிக்கைகள் வேகம் பிடிக்கவில்லை.
இதுகுறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி கூறியதாவது: எங்கள் அமைப்பின் கோரிக்கையை ஏற்று பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், 15 மாதங்களாகியும் பணிகள் தொடங்கவில்லை.
இந்த திட்டத்துக்காக 2024 செப்டம்பர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதன்பின், ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 17-ல் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டன.
அதன்பின், மூன்று மாதங்களைக் கடந்தும், இன்னும் பகுப்பாய்வில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி ஆணை இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி, பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், பெருந்துறை சுற்றுவட்டார மக்களின் அதிருப்திக் குரல் சபையில் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதோடு, இந்த கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 3-ம் தேதி, பெருந்துறை சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.