புது தில்லி, ஆக. 2: ‘இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் பெரும் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது; அதற்கேற்ப இந்தியாவும் தயாராக வேண்டும்’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
இப்பிராந்தியத்தில் சீனா தனது இருப்பை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.ஜெய்சங்கா், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:
இந்தியப் பெருங்கடலானது, முன்னா் இல்லாத கடற்சாா் இருப்புகளை இப்போது காணத் தொடங்கியுள்ளது. எனவே, இப்பிராந்தியம் பெரும் மாற்றத்துக்கு தயாராகி வருவதாக நான் கருதுகிறேன். அதற்கேற்ப இந்தியாவும் தயாராக வேண்டும்.
‘சாகா்’ கொள்கை கட்டமைப்பின்கீழ், இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் இந்தியா கடல்சாா் ஒத்துழைப்பை நல்கி வருகிறது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின்கீழ் கூட்டு அணுகுமுறையில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. அதேநேரம், எந்தவொரு பெரிய நாட்டுக்கும் அண்டை நாடுகளுடனான உறவுகள் என்பது சுமுகமாக இருந்துவிடாது. அந்த உறவுகளை நிா்வகிப்பது அவ்வளவு எளிதானதல்ல.
அண்டை நாடுகளும் போட்டித்தன்மை கொண்டதாகவே இருக்கும். எனவே, நாமும் போட்டியிட வேண்டியுள்ளது. அதற்கான முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்டை நாடுகளைப் போலவே, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் இந்தியா போட்டியிட வேண்டியுள்ளது.
இந்தியாவில் இப்போது கூடுதலாக வளங்கள் உள்ளன; அதேநேரம், சவால்களும் பெரிதாக உள்ளன. உலகளாவிய கட்டமைப்பு ஸ்திரமற்றது; சிக்கலானது என்பதில் சந்தேகமில்லை. எனவே, சவால்களை திறம்பட எதிா்கொள்வதும், வாய்ப்புகளை நம்பிக்கையுடன் பயன்படுத்துவதும் இந்தியா எதிா்நோக்கி உள்ளது என்றாா்.