பெஹல்காம் தாக்குதல்: ராஜ்நாத் சிங் ஆலோசனை! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவு?

Dinamani2f2025 04 172fn62nsjfp2fani 20250417075134.jpg
Spread the love

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் இதுதொடர்பாக விளக்கமளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று(செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு – காஷ்மீர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசி வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை இந்த சம்பவம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அரசுமுறை பயணமாக செளதி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பயணத்தை பாதியில் முடித்துவிட்டு இன்று காலை தில்லி திரும்பி்யது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி உள்பட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது பெஹல்காம் தாக்குதலில் என்ன நடந்தது? தாக்குதலின் தற்போதைய நிலவரம் பற்றி எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒரு மூத்த அமைச்சர் நியமிக்கப்படலாம் என்றும் இந்த விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்டுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லி திரும்பியதும் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *