‘பேச்சுரிமை என்ற பெயரில்…’ – நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் மறுத்த நீதிபதி கூறியது என்ன? | Should not create social conflicts in the name of freedom of speech: HC insists in Kasthuri case

1339711.jpg
Spread the love

மதுரை: தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கேவலமான, தரக்குறைவான அறிக்கை வெளியிடுபவர்கள், பேசுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டால், அதிலிருந்து தப்ப மன்னிப்பு கோரினாலும், இனி ஏற்கப்படாது என்ற வலுவான செய்தியை நீதிமன்றம் அனுப்ப வேண்டும். இல்லையெனில் யார் வேண்டுமானாலும் வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசிவிட்டு, அதிலிருந்து தப்புவதற்காக மன்னிப்பு கோரலாம் என்றாகிவிடும்” என்றார்.றிவுறுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக மதுரை திருநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.

இந்நிலையில், கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில் நீதிபதி கூறியது: “மனுதாரரின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கேட்டபோது, அவர் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக எதையும் நேரடியாகக் கூறவில்லை. எனினும், தெலுங்கு பேசும் அனைத்து மக்களையும் மோசமாக சித்தரித்திருப்பது தெரிகிறது. பேச்சு சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை. அதேநேரத்தில், பேச்சுரிமை என்ற பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ அல்லது சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது.

இந்த வழக்கில் மனுதாரரின் பேச்சு, தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டிய நிலையில் நீதிமன்றம் உள்ளது. மனுதாரரின் பேச்சு வெறுப்பு பேச்சாகவே உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் வெடிகுண்டுபோல பரவி உள்ளது. தமிழ், தெலுங்கு பேசும் மக்களிடையே வன்முறை எழும்போது, அது வெடிக்க காத்துக் கொண்டிருக்கும்.

பொதுமேடைகளில் இதுபோன்ற பிரச்சினைகளைப் பேசுவதற்கு முன், யோசித்துப் பேச வேண்டும். சமூக ஊடக காலத்தில் நாம் பேசுவது சமூக வலைதளங்களில் நிரந்தரப் பதிவாகிவிடும். பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மொழியின் அடிப்படையில் இழிவுபடுத்தும்போது, சகிப்புத்தன்மை என்பது இல்லாமல் போயிவிடும்.

மனுதாரரின் ‘எக்ஸ்’ வலைதளப் பதிவை பார்க்கும்போது, ​​இதுபோன்ற மோசமான மற்றும் மிதமிஞ்சிய கருத்தை தெரிவித்ததற்காக, அவர் மன்னிப்பு கேட்க உண்மையாக முயற்சி மேற்கொண்டதாகவும் தெரியவில்லை. தனது பேச்சை நியாயப்படுத்தவே முயற்சித்துள்ளார். இதுபோன்ற வழக்குகளில், பொதுநலனையே நீதிமன்றம் மனதில் கொள்ள வேண்டும். கற்றவர், சமூக ஆர்வலர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் மனுதாரர் கூறிய வார்த்தைகள் மிகவும் இழிவானவை. இதுபோன்ற கீழ்த்தரமான, அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கும்போது, நீதிமன்றம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையெனில், அது மோசமான முன்மாதிரியை உருவாக்கிவிடும்.

இதுபோன்ற பிதற்றல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற செய்தியை, சம்பந்தப்பட்ட அனைவரும் அறிய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, எதிர்காலத்தில்இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க முடியும். கேவலமான மற்றும் தரக்குறைவான அறிக்கை வெளியிடுபவர்கள், பேசுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டால், அதிலிருந்து தப்ப மன்னிப்பு கோரினாலும், இனி ஏற்கப்படாது என்ற வலுவான செய்தியை நீதிமன்றம் அனுப்ப வேண்டும்.

இல்லையெனில் யார் வேண்டுமானாலும் வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசிவிட்டு, அதிலிருந்து தப்புவதற்காக மன்னிப்பு கோரலாம் என்றாகிவிடும். வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கான விளைவுகளை அவசியம் எதிர்கொள்ள வேண்டும்.எனவே, வார்த்தைகளை கருணையுடன் கையாளுங்கள். பிரிவினை மற்றும் வெறுப்பைக் காட்டிலும், புரிதலையும், இரக்கத்தையும் வளர்க்கும் உரையாடல்களை மேற்கொள்வோம். இவ்வாறு செய்வதன் மூலம், பேச்சு சுதந்திரத்தின் உண்மையான சாராம்சத்தை மதிப்போம். ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்கான கருவியாக அதைப் பயன்படுத்துவோம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்று நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *