பேச்சு தோல்வி: கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி ஜூலை 30-ல் திருமங்கலத்தில் ‘பந்த்’ | Negotiations fail: Bandh in Thirumangalam on 30th demanding removal of toll Plaza

1285105.jpg
Spread the love

மதுரை: பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி வரும் 30-ம் தேதி திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ‘பந்த்’ போராட்டம் நடத்தப்போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

திருமங்கலம் நகராட்சி எல்லைக்குள் மதுரை – திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி செயல்படுகிறது. இந்த சுங்கச்சாவடி விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமைத்துள்ளதாகவும், இந்த சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள், வணிகர்கள் பல்வேறு போராட்டங்ளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது மதுரை ஒத்தக்கடைக்கு பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்ததும் கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படும் என உறுதியளித்து இருந்தார்.

ஆனால், தற்போது வரை இந்த சுங்கச்சாவடி அகற்றப்படவில்லை. அதனால், கப்பலூர் சுங்கச்சாவடியில் அடிக்கடி வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒரு முறை துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு பிரச்சினை இந்த சுங்கச்சாவடியில் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 10-ம் தேதி முதல் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் வாகன ஓட்டிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில் 30-ம் தேதி திருமங்கலம் பகுதியில் முழு கடையடைப்பு மற்றும் கப்பலூர் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் அறிவித்தனர்.இந்த தகவலை அடுத்து கப்பலூர் சுங்கச்சாவடி சார்பாக பாதுகாப்பு வேண்டி காவல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் போராட்டத்தை கைவிடக் கோரி இன்று கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினரிடம் திருமங்கலம் டிஎஸ்பி அருள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வரும் 30-ம் தேதி திட்டமிட்டப்படி சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டமும், முழு கடையடைப்பு போராட்டமும் நடத்துவதாக சுங்கச்சாவடி எதிர்ப்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஹமீது ராஜா கூறுகையில், “விதிமுறையை மீறி அமைக்கப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.

சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த 3 மாதம் முதல் 6 மாதம் வரை காலஅவகாசம் கேட்டார்கள். அதற்கு மனிதாபிமான அடிப்படையில் சம்மதித்த நாங்கள், அதுவரை திருமங்கலம் சுற்றுவட்டார உள்ளூர் கிராம மக்கள், ஆதார் கார்டை காட்டினாலே சுங்கச்சாவடியில் கட்டணம் பெறாமல் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் அதற்கு மறுக்கிறார்கள். எனவே, தற்போது எங்களுக்கு ஒரே நோக்கம் கப்பலூர் சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான்.

மேலும், எதையும் வாய்மொழியாக சொல்கிறார்கள். அதனால், திட்டமிட்டப்படி, வரும் 30-ம் தேதி திருமங்கத்தைச் சுற்றி 10 கி.மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் ‘பந்த்’ நடத்தப்படும். வாகனங்கள் எதுவும் ஓடாது. மக்கள் ஒன்று திரண்டு சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்,” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *