பேனர் வைத்ததற்காக தவெக மீது மட்டுமே வழக்கு: சி.டி.நிர்மல்குமார் ஆவேசம் | Case File Against Only TVK Member for Banner Issue: CT Nirmal Kumar Anger

1377865
Spread the love

நாமக்கல்: பேனர் வைத்ததற்காக தவெக நிர்வாகி மீது மட்டும்தான் வழக்கு போடப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார் காட்டமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியது: “நாமக்கல், கரூரில் நாளை (செப்.27) தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கடைசி நேரத்தில் அனுமதியும் வழங்கப்படுகிறது. கரூரில் மதியம் வரை கூட்டம் நடைபெற இடத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. மதியத்துக்கு மேல்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் வெற்றிப் பயணமாக மாறி வருகிறது. காவல் துறையினரும், அதிகாரிகளும் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். திருச்சியில் பிரச்சாரம் முடித்து 10 நாள் கழித்து சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் ஒரு வாரம் கழித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தடைகளையும் தாண்டி 2026-ம் ஆண்டு தேர்தல் வித்தியாசமான தேர்தலாக அமையும். தவெகவுக்கு மட்டும் 10 நிபந்தனைகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாக நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

பேனர் வைத்ததற்காக தவெக மீது மட்டும்தான் வழக்கு போடப்படுகிறது. கட்சி நிர்வாகியும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்த சவால்கள் எங்களுக்கு மட்டும்தான் உள்ளது” என்றார். சனிக்கிழமை மட்டும் வரும் நபர் நானில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு, “அவர் வகிக்கும் துறை பற்றி முதலில் சொல்லட்டும்” என்றார் சி.டி.நிர்மல்குமார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *