பைக் டாக்​சியை தடை செய்​யக்​கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி | Auto drivers rally to ban bike taxis

1343970.jpg
Spread the love

சென்னை: பைக் டாக்சியை தடை செய்யக்கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர். பைக் டாக்சியை தடை செய்யக்கோரி கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னை, எழும்பூர் லேங்க்ஸ் தோட்டச் சாலையின் இருபுறமும் நேற்று காலை முதலே ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து, கூவம் ஆறு பாலத்தில் இருந்து பேரணியாக ஆட்டோ ஓட்டுநர்கள் கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். வழிநெடுகிலும், பைக் டாக்சியை தடை செய்யுமாறும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துமாறும் அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேயர் சுந்தர் ராவ் நாயுடு சிலை அருகே சென்றபோது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம், அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறியதாவது: முறையற்று செயல்படும் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என்பதே ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கை. 4 ஆண்டுகளாக பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என்றே போக்குவரத்து அமைச்சரும் சொல்லி வந்தார்.

2022-ல் உயர் நீதிமன்றத்தில் பைக் டாக்சி மற்றும் அதற்கான செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 6 மாதத்தில் மேல்முறையீட்டு வழக்கில் செயலிக்கான தடை விலக்கப்பட்டது. ஆனால், பைக் டாக்சிக்கான தடை அப்படியே இருக்கிறது.

அண்மையில் வழக்கு விசாரணையின்போதுகூட, பைக் டாக்சியில் பயணித்த 189 பேருக்கு காப்பீட்டை பெற்றுத்தர முடியாததால் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என்றே போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. ஆனால், போக்குவரத்துத் துறை அமைச்சரோ தடையில்லை என்று கூறுகிறார்.

பைக் டாக்சியால் 5 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், 11 ஆண்டுகளாக மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்காமல் இருப்பது ஏன்? இதுதொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் மீட்டர் கட்டணம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்தோம். இந்த கோப்பு முதல்வரின் மேஜையில் இருப்பதாக கூறுகின்றனர்.

இதற்காக செயலி தொடங்க அரசு திட்டமிட்ட நிலையில், பன்னாட்டு செயலி போக்குவரத்து நிறுவனங்கள் உடனடியாகக் கட்டணத்தைகூட குறைத்தன. ஆனால், செயலி உருவாக்குவதும் நிலுவையில் உள்ளது. எனவே, மீட்டர் கட்டணத்தை உயர்த்தி செயலி மூலமாக அமல்படுத்த வேண்டும். பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேரணியில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.மகேந்திரன், கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் சம்பத், மாரியப்பன், கலைராஜன், வேணுராம், ரமேஷ், ரகு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *