‘பைசன்’ பார்க்க நேரம் இருக்கிறது; விவசாயிகளை பார்க்க நேரமில்லையா? – முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி | There is time to watch Bison no time to see farmers EPS question to CM

Spread the love

சென்னை: ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது. விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய நேரம் இருக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை.

ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது. ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா?

ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது. தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்?. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்?.

அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா?.

அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான். விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *