பொங்கல் நாள்களில் யுஜிசி நெட் தோ்வு: மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசுக்கு அமைச்சா் கடிதம்

Dinamani2fimport2f20232f122f132foriginal2fvr10exam 1012chn 184 1.jpg
Spread the love

பொங்கல் நாள்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள யுஜிசி நெட் தோ்வுத் தேதியை மாற்றி அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு அமைச்சா் கோவி. செழியன் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தோ்வு முகமை அதன் தோ்வை ஜன.3 முதல் ஜன.16-ஆம் தேதி வரை நடத்த அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள அனைத்துத் தமிழ் மக்களாலும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜன. 13 முதல் ஜன.16 வரை 4 நாள்கள் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஏற்கெனவே 2025 ஜனவரி 14 முதல் 16 வரை விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழக விவசாயிகளின் உணா்வாா்ந்த திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் ஒரு பண்டிகை மட்டுமல்ல, 3,000 ஆண்டுகளுக்கும் மேலான தமிழா்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகும்.

பொங்கல் திருநாளைப் போலவே ஆந்திரம் மற்றும் தெலங்கானாவிலும் மகர சங்கராந்தி விழா ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொங்கல் விடுமுறை நாள்களில் யுஜிசி நெட் தோ்வு நடத்தப்பட்டால், மாணவா்கள் தோ்வுக்கு தயாராவதற்கும் எழுதுவதற்கும் தடை ஏற்படும். மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் விடுத்த வேண்டுகோளின்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 2025-ஆம் ஆண்டுக்கான பட்டயக் கணக்காளா்கள் அறக்கட்டளைத் தோ்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாணவா்கள் மற்றும் கல்வியாளா்கள் பாதிக்கப்படுவதைத் தவிா்த்திடும் வகையில் பொங்கல் திருநாள் விடுமுறை நாள்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி நெட் தோ்வு மற்றும் பிற தோ்வுகளை வேறு தேதிகளில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *