தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது.
இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்ட இந்தப் பொங்கல் பரிசு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயல் கிராமத்திலும் பொங்கல் தொகுப்பு வழங்கிய போது முதியவர்களின் பணத்தில் தலா ரூ.500 எடுத்துக் கொண்டு ரூ.2500 மட்டும் வழங்கியதாக அதிகாரிகளுக்குத் தகவல் போனது.
அதனைத்தொடர்ந்து, அறந்தாங்கி அருகில் உள்ள ராஜேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த இப்ராகிம்ஷா (வயது: 30) 2 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் கூத்தாடிவயல் அங்காடி விற்பனையாளராகப் பணிக்கு வந்துள்ளார்.
இவர்தான் தற்போது தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் முதியோர்களைத் தேர்ந்தெடுத்து 12 பேரிடம் கைரேகை பதிவு செய்து கொண்டு தலா ரூ.500 பிடித்துக் கொண்டு ரூ.2500 மட்டும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்யத் தொடங்கினர். மற்றொருபுறம், பணத்தை எடுத்தவர்களின் வீடு தேடிச் சென்று எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து, அதிகாரிகள் விசாரணைக்கு வந்தால் பணம் எடுக்கவில்லை முழுத் தொகையும் கொடுத்துவிட்டதாகக் கூறச் சொல்லி இருக்கிறார்.
இது சம்பந்தமாக துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர் ஒருவர் முதியவர்களை ஏமாற்றி அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் தலா ரூ. 500 யை எடுத்துக்கொண்ட விவகாரம், அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.