கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு!
இரண்டு மஞ்சள் இலைகள் (அல்லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ (மொட்டை மாடியிலோ) கணுப்பிடி வைப் பார்கள்.
கணுப்பிடி வைக்கும் இடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி, அழகு செய்வார்கள். முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து கொள்வார்கள். சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைப்பார்கள். இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றப்படும்.
வெற்றிலை – பாக்கு, பழம், தேங்காய், கரும்புத் துண்டுகள், மஞ்சள் அட்சதை, பூக்கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாதபடி பார்த்துக்கொள்வார்கள்.
பூஜையின்போது கணுப்பிடியாக வைத்த சாத வகைகள் இருக்கும் இடத்தில் அட்சதையையும் பூக்களையும் இட்டு, ‘கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணமாம் கல்யாணம்’ என்று சொல்லி வணங்குவார்கள். அதன் பிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பார்கள்.
கணுப்பிடி அன்று சமையலில் எலுமிச்சம் சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும், அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் இடம்பெறும். கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட்டார்கள் என்பது மரபு.
இந்த நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப் படுகிறது. ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என்னும் பழமொழி விளக்கும்.