`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

Spread the love

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில நாட்களிலேயே வரதட்சணை தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே இடையே கருத்து வேறுபாடு நிலவியிருக்கிறது. அவ்வப்போது அது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டிருக்கிறது.

அப்படியான ஒரு வாக்குவாதத்தால்  கணவரிடம் கோபித்துக் கொண்டு, சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்று தங்கியிருக்கிறார் பிரியங்கா.

தற்கொலை செய்து கொண்ட பிரியங்கா

இந்தச் சூழலில்தான் கடந்த 20.01.2026 அன்று மாலை தன்னுடைய வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அதையடுத்து, `வரதட்சணை கொடுமை காரணமாகவே என்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டாள்.

என் மகளை ஆபாசமாக வீடியோ எடுத்ததுடன், வரதட்சணை தரவில்லை என்றால் அதை என் மகள் வேலை செய்யும் இடத்திற்கு அனுப்பி விடுவதாகவும் கணவர் கார்த்திகேயன் மிரட்டியிருக்கிறார்.

அதனால் கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் பிரியங்காவின் தாய் சுமதி.

இந்த சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய பிரியங்காவின் உறவினர்கள், “பிரியங்கா எம்.ஏ., இங்லீஷ் படிச்சவ. ரொம்ப அமைதியான பொண்ணு. பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தா.

கல்யாணத்தப்ப பத்து பவுன் நகையும், சீர்வரிசை சாமான்களும் வாங்கிக் கொடுக்கறதா சொல்லியிருந்தோம். ஆனா அப்போ 5 பவுன்தான் போட முடிஞ்சுது. மீதி பவுனை நிலத்தை வித்துப் போடறோம்னு சொல்லி இருந்தோம்.

சரியான விலை கிடைக்காததால நிலத்தை விற்க முடியல. அதனால அந்தப் பவுனை சொன்ன நேரத்துல எங்களால போட முடியல. ஆனா மாமியார் வீட்ல எங்க பொண்ணுகிட்ட மீதி நகையை கேட்டு அவளை டார்ச்சர் பண்ணி இருக்காங்க.

அதனாலதான் அவ கோச்சிக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்தா. பொண்டாட்டினு கூட பார்க்காம அவளை அசிங்கமா வீடியோ எடுத்ததோட இல்லாம, `அதை நெட்ல போட்ருவேன்… நீ வேலை பாக்கற ஸ்கூலுக்கு அனுப்பிடுவேன்’னு சொல்லி மிரட்டி இருக்கான் அவளோட வீட்டுக்காரன்.

அதுலதான் புள்ள பயந்து போய்ட்டா. மீதி பவுனை போட்டாலும், மறுபடியும் இவங்ககிட்ட போய் எப்படி வாழறதுனு தெரியாமதான் இந்த முடிவை எடுத்திருக்கா. பணத்தை பெரிசா நினைக்கற குடும்பத்துல எப்படி ஒரு பொண்ணால வாழ முடியும் ? அதுல வெறுத்துப் போய்தான் எங்க பொண்ணு எங்களை விட்டுப் போயிட்டா” என்றனர்.

இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் கண்டமங்கலம் போலீஸார், விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *