திருப்பூர்: ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டமாக இருந்த வெள்ளக்கோவில் கல்லமடை அருகில் 2005-ல் தேமுதிக சார்பில், விஜயகாந்த் நற்பணி மன்றம் மூலம் 1.90 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டு மனைகளாகப் பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல, சத்தியமங்கலம் பகுதியில் 1.10 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.
அப்போதைய தேமுதிக மாவட்டத் தலைவர் சந்திரகுமார் பெயரில் அந்த நிலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டு, அதன் பவர் ஆவணம் கட்சியின் மாநிலப் பொருளாளர் பெயரில் எழுதப்பட்டது. தலா இரண்டே கால் சென்ட்டாக 75 வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு, 33 பேருக்கு முதலில் வழங்கப்பட்டு, மீதி ஒரு ஏக்கர் அளவு நிலம் வழங்கப்படாமல் இருந்தது. விஜயகாந்த் நகர் என்ற பெயரும் சூட்டப்பட்டது.
பின்னர், சந்திரகுமார் தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு மாறி, அக்கட்சி சார்பில் போட்டியிட்டு தற்போது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் எம்எல்ஏ சந்திரகுமார் பவர் ஆவணத்தை ரத்து செய்து, 3 ஏக்கரில் 1 ஏக்கர் நிலத்தை தானே வைத்துக் கொண்டு விற்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேமுதிக சார்பில் காங்கயம் சார்பு நீதிமன்றத்தில், தேமுதிக செயலாளர் இளங்கோ வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, 3 ஏக்கர் நிலமும் தேமுதிகவுக்கே சொந்தம், உரிய முறைப்படி அதை திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து தேமுதிக உயர்மட்டக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.இளங்கோவன், இளைஞரணி துணைச் செயலாளர் பா.ஆனந்த், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.குழந்தைவேல், மாவட்ட அவைத் தலைவர் ஏ.மணி, வழக்கறிஞர்கள் ராகவன், கந்தசரவணன், பன்னீர்செல்வம் ஆகியோர் நிலத்தைப் பார்வையிட்டு, தற்போதைய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் விவரம் தெரிவித்தனர். மீட்கப்பட்ட நிலம் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் கட்சியினர் தெரிவித்தனர்.